வைரல்

“நோஸ்ட்ராடமஸ்ஸின் ‘தீர்க்கதரிசனங்கள்’ உண்மையா ?” - யார் இந்த Nostradamus?

அறிவியலையும் மூடநம்பிக்கை கைக்கொள்ளும் முயற்சிதான் நோஸ்ட்ராடமஸ்!

“நோஸ்ட்ராடமஸ்ஸின் ‘தீர்க்கதரிசனங்கள்’ உண்மையா ?” - யார் இந்த Nostradamus?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

உலகில் முக்கியமான சம்பவங்கள் நிகழும்போதெல்லாம் அடிபடும் பெயர் நோஸ்ட்ராடமஸ்!

தற்போதைய கொரோனா பரவல் தொடங்கி, உலக வர்த்தக கட்டட தகர்ப்பு, ஹிட்லரின் பிறப்பு எனப் பல வரலாற்று நிகழ்வுகளை பல நூறு வருடங்களுக்கு முன்பே அனுமானித்து எழுதிச் சென்ற தீர்க்கதரிசி, நோஸ்ட்ராடமஸ் என சொல்லப்படுகிறது.

தீர்க்கதரிசனம் என்பது சாத்தியம்தானா?

யார் இந்த நோஸ்ட்ராடமஸ்?

நோஸ்ட்ராடமஸ் அடிப்படையில் ஒரு ஜோசியர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். பிரான்ஸ் நாட்டில் 1503ம் ஆண்டில் பிறந்தார். இளம் வயதிலயே அறிவுக் கூர்மையுடன் இருந்தார். கல்வியில் சிறந்து விளங்கினார். லத்தீன், கிரேக்கம், ஹூப்ரூ ஆகிய மொழிகளிலும் கணிதத்திலும் மதிநுட்பம் பெற்று திகழ்ந்தார். அவரின் தாத்தாவின் வழியில் பழைய சடங்குகள் மற்றும் வானியல் சாஸ்திரம் முதலிய விஷயங்களுடன் நோஸ்ட்ராடமஸ்ஸுக்கு பரிச்சயம் ஏற்பட்டது. வானியல் பொருட்கள் எப்படி மனிதனின் விதியை இயக்குகின்றன என்பதைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினார் நோஸ்ட்ராடமஸ்.

அவரின் தேடல் விரிவடைந்தது. பல கிராமங்களின் ஊடாக அவர் பயணித்தார். மூலிகை மருத்துவத்தைப் பற்றி ஆய்வு செய்தார். மூலிகை மருந்துகள் தயாரிக்கும் திறன் கற்றார். பிறகு ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் அங்கு ஆசிரியர்களாக இருந்த பாதிரியார்களுடன் அவருக்கு முரண் ஏற்பட்டது. கத்தோலிக்க பாதிரியார்களின் போதனைகளை நோஸ்ட்ரோடமஸ் விமர்சித்தார். அவர்கள் நோஸ்ட்ரோடமஸ்ஸின் வானியல் ஜோதிடத்தை விமர்சித்தனர். இதன் காரணமாக பல்கலைக்கழகத்திலிருந்து நோஸ்ட்ரோடமஸ் வெளியேற்றப்பட்டார்.

மெல்ல அவரது ஆர்வம் மந்திர மருத்துவ முறைகள் பக்கம் திரும்பத் தொடங்கியது. இரவு நேரத்தில் நீரும் மூலிகைகளும் நிரப்பப்பட்ட பாத்திரத்துக்கு முன் அமர்ந்து வெகுநேரம் தியானம் செய்தார். தியானம் அவருக்கு பலவித தரிசனங்களைக் கொடுத்தது. அந்த தரிசனங்கள் பெரும்பாலும் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்புகளாக இருந்தன. 1550ஆம் ஆண்டில் நோஸ்ட்ராடமஸ் முதன்முதலாக வானியல் பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்த வருடத்தில் நடக்கவிருக்கும் விஷயங்களை முன் யூகித்து எழுதினார்.

“நோஸ்ட்ராடமஸ்ஸின் ‘தீர்க்கதரிசனங்கள்’ உண்மையா ?” - யார் இந்த Nostradamus?

1554ம் ஆண்டிலிருந்து நோஸ்ட்ராடமஸ் கணித்த வானியல் சாஸ்திரத்தில் அவரது தீர்க்கதரிசனங்களும் முக்கியப் பகுதிகளாக இடம்பெறத் தொடங்கின. அச்சமயத்தில்தான் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார் நோஸ்ட்ராடமஸ். அவருடைய ஆற்றலையெல்லாம் ஒருமித்து ஒரு பெரும் முயற்சியை முன்னெடுக்க நினைத்தார். அம்முயற்சிக்கு ‘நூற்றாண்டுகள்’ எனப் பெயர் சூட்டினார். அடுத்த 2000 வருடங்களில் நடக்கவிருக்கும் 100 விஷயங்களை முன்யூகித்து 10 தொகுதிகளாக வெளியிட முடிவெடுத்தார். 1555ஆம் ஆண்டு பல காலத்துக்கு பிறகு நடக்கக்கூடிய சம்பவங்களை பற்றிய முன் அனுமானங்களை ‘தீர்க்கதரிசனங்கள்’ என்கிற பெயரில் வெளியிட்டார் நோஸ்ட்ராடமஸ்.

அக்காலகட்டத்தில் மதங்களின் ஆட்சி நிலவி வந்தமையால், தண்டனைக்குள்ளாகாமல் இருப்பதற்கென ஒரு உத்தியை கண்டுபிடித்தார் நோஸ்ட்ராடமஸ். அவரின் தீர்க்கதரிசனங்களை நான்கு வரி செய்யுள்களாகவும் பிற மொழி கலப்புகளாகவும் எழுதினார்.

நோஸ்ட்ராடமஸ்ஸை சர்ச்சைகள் சூழத் தொடங்கின. அவர் சாத்தானின் வேலைக்காரன் எனப் பலர் பேசினர். வேறு பலர் அவருக்கு இறை அருளால்தான் அத்தகைய தீர்க்கதரிசனங்கள் ஏற்படுவதாக நம்பினர். ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலத்தில் நோஸ்ட்ராடமஸ் மிகவும் முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்தார். ஐரோப்பாவின் மேட்டுக்குடி மக்களிடையே அவர் பிரபலமடைந்தார்.

அப்போதுதான் ஒரு முக்கியமான தொடர்பு நோஸ்ட்ராடமஸ்ஸுக்கு கிடைத்தது. பிரான்ஸ் நாட்டை ஆண்ட இரண்டாம் ஹென்றியின் மனைவி Catherine de Medici நோஸ்ட்ராடமஸ் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். நோஸ்ட்ராடமஸ் 1555ஆம் ஆண்டில் எழுதிய தீர்க்கதரிசனங்களில் அரசியின் குடும்பத்துக்கு இருந்த மிரட்டல்களையும் நோஸ்ட்ராடமஸ் முன் யூகித்திருந்தார். அதைப் படித்ததும் அரசி நோஸ்ட்ரோடமஸ்ஸை பாரிஸ்ஸுக்கு வரவழைத்தார். தன் குழந்தைகளுக்கான ஜாதகம் கணிக்கச் சொன்னார். சில ஆண்டுகள் கழித்து நோஸ்ட்ராடமஸ் ஹென்றி அரசவையின் மருத்துவராகவும் ஆலோசகராகவும் பணியமர்த்தப்பட்டார். 1556ஆம் ஆண்டு அரசன் ஹென்றியை பற்றி ஒரு தீர்க்கதரிசனத்தை சொன்னார் நோஸ்ட்ராடமஸ்.

இளஞ்சிங்கம் முதியதை தாண்டும்

போர்க்களத்தின் சண்டை ஒன்றில் வெல்லும்

தங்கக் கூண்டால் முதிய சிங்கத்தின் கண்கள் குத்தப்படும்

இரு காயங்கள் ஒன்றாகி பின் குரூரமாக மரணமடையும்

அக்காலத்தில் அரச குடும்பங்கள் விளையாடும் ஒரு புகழ்பெற்ற விளையாட்டு இருந்தது. இரண்டு பேர் குதிரைகளில் ஏறிக் கொள்வார்கள். ஒரு கையில் ஈட்டி வைத்திருப்பார்கள். ஒருவர் மற்றொருவரை ஈட்டி வைத்து குத்தி வீழ்த்தும் விளையாட்டு.

அந்த விளையாட்டை அரசன் விளையாடக் கூடாது என எச்சரித்தார் நோஸ்ட்ராடமஸ். ஆனால் அரசன் கேட்கவில்லை. மூன்று வருடங்கள் கழிந்தன. இரண்டாம் ஹென்றிக்கு 41 வயது ஆகியிருந்தது. நோஸ்ட்ராடமஸ் எச்சரித்த விளையாட்டை விளையாடச் சென்றான். எதிராளியின் ஈட்டி கண்ணுக்குள் பாய்ச்சப்பட்டு உயிரிழந்தான்.

இரண்டாம் ஹென்றியின் மரணத்தை கணித்தது மட்டுமின்றி துல்லியமாக கணித்ததால் நோஸ்ட்ராமஸ்ஸை உலகம் நம்பத் தொடங்கியது. இதுபோன்ற தீர்க்கதரிசனங்கள் எல்லாம் சாத்தியம்தானா? வானியல் நிகழ்வுகள் மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்க முடியுமா?

நோஸ்ட்ராடமஸ் எழுதிய தீர்க்கதரிச செய்யுள்கள் பலவும் பேரிடர்களை பற்றியே அதிகம் குறிப்பிட்டிருந்தன. பூகம்பம், போர்கள், வெள்ளம், படையெடுப்பு, கொலைகள், பஞ்சம், போர்கள் மற்றும் பெருந்தொற்று முதலியவை பற்றியே அதிக தீர்க்கதரிசனங்கள் இருந்தன. அந்த வகையில்தான் நெப்போலியன் மற்றும் ஹிட்லர் போன்றோரின் வருகைகள், பிரஞ்சு புரட்சி, அணு குண்டு, ஜான் எஃப் கென்னடி கொலை, இரட்டைக் கோபுர தகர்ப்பு முதலிய விஷயங்களுடன் நோஸ்ட்ராடமஸ்ஸை தொடர்புபடுத்தி பேசுகின்றனர் அவரை மேற்கோள் காட்டும் பலர்.

அறிவியலில் தீர்க்கதரிசங்களுக்கு இடமில்லை. விஞ்ஞானப்பூர்வமான வரையறுப்புகளுக்கு மட்டும்தான் இடமுண்டு. அவையும் சூழல் மாறுகையில் மாறும் தன்மையை கருத்தில் கொண்டு ஆராயப்பட்டு மாற்றியமைக்கப்படும். எனவே அறிவியல் நோஸ்ட்ராடமஸ்ஸை ஏற்றுக் கொள்வதில்லை. ‍‍‍‍‍‍ ‍‍

“நோஸ்ட்ராடமஸ்ஸின் ‘தீர்க்கதரிசனங்கள்’ உண்மையா ?” - யார் இந்த Nostradamus?

பிறகு எப்படி நோஸ்ட்ராடமஸ்ஸுக்கு இந்தளவுக்கு பெயர்?

முக்கியமான காரணம், நோஸ்ட்ராடமஸ் அவரின் காலத்திலேயே அவர் இயற்றிய செய்யுள்கள் யாவும் சாதாரண மனிதர்களை பற்றியோ மக்களை பற்றியோ வாழ்க்கை பற்றியோ உணர்வுகளை பற்றியோ இருந்ததில்லை. அவை யாவும் உயர்ந்த அதிகாரங்களை நோக்கித்தான் இயற்றப்பட்டன. அரசர்கள், அரசிகள், போப்கள், போர்கள், படையெடுப்புகள், மதங்கள் முதலியவற்றைச் சார்ந்தே நோஸ்ட்ராடமஸ்ஸின் கணிப்புகள் இருந்தன. இவையன்றி இயற்கைப் பேரிடர்களும் இடம்பெற்றிருந்தன.

நோஸ்ட்ராடமஸ் வெற்றி அடைந்த இடம் ஒன்றுதான். வரலாற்றை கவனித்து அவற்றை எதிர்கால தீர்க்கதரிசனங்களாக எழுதுகையில் குறிப்பான வார்த்தைகளை கொண்டு எழுதாமல், பொதுவான இலக்கியச்சுவை வார்த்தைகளை கொண்டு விடுகதை போல எழுதினார்.

பறவை, இளஞ்சிங்கம், புதிய நகரம், புராதன பெண், தலையற்றவர், நோய் பூதம் முதலிய பொதுவான வார்த்தைகளை எந்த விஷயத்தோடும் எவர் வேண்டுமானாலும் பொருத்தி அர்த்தம் கொள்ள முடியும். இதில் சுவாரஸ்யம் ஒன்றும் இருக்கிறது.

லண்டன் தீ, பிரெஞ்சு புரட்சி, ஐரோப்பாவில் கொடுங்கோலன், அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தகர்ப்பு என எந்த சம்பவமும் நடப்பதற்கு முன் நோஸ்ட்ராடமஸ்ஸின் செய்யுளை கொண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. எல்லாமுமே நடந்து முடிந்த பிறகுதான் கண்டறிந்து சொல்லப்பட்டது. இதில் நோஸ்ட்ராடமஸ்ஸின் செய்யுள்கள் பல முறை பலவிதங்களில் மொழிபெயர்க்கப்பட்ட உண்மையையும் மறந்துவிட முடியாது.

அதிகார வர்க்கத்துடன் நெருக்கமாக இருந்ததால் பிரபலமடைந்த ஒருவர் தீர்க்கதரிசனங்கள் என்கிற பெயரில் எழுதிய பூடகமான கதைகளை ஜோதிடத்தை நம்ப விரும்புபவர்கள் வெவ்வேறு அர்த்தங்கள் கொடுத்து நம்ப வைக்க முயலுவதே நோஸ்ட்ராடமஸ் இன்றளவும் பிரபலமாக இருப்பதற்கான அடிப்படையான காரணமாக இருக்கிறது.

புராணங்களையும், மூடநம்பிக்கைகளையும் உண்மைகளை கொண்டு அறிவியல் எதிர்த்து உடைத்தெறிகிறது. அத்தகைய அறிவியலையும் மூடநம்பிக்கை கைக்கொள்ளும் முயற்சிதான் நோஸ்ட்ராடமஸ்!

banner

Related Stories

Related Stories