வேரில் இருந்து இலை வரை முழுக்கமுழுக்க பயன் தரும் தாவரமான தென்னையை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 2-ஆம் தேதி ‘உலக தென்னை தினம்’ கொண்டாடப்படுகிறது.
ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில், 1969ம் ஆண்டு செப்., 2ஆம் தேதி தொடங்கப்பட்டதை முன்னிட்டு, ஆண்டுதோறும் செப்., 2ஆம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இயற்கை பானமான இளநீர் தொடங்கி, தென்னையின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். “பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு, தென்னையைப் பெற்றால் இளநீரு” என்ற நம் முன்னோர் வாக்கு தென்னையின் பயன்பாட்டு குணத்திற்கான சான்று.
உலகம் முழுக்க பரவலாக விளைவது மட்டுமல்லாமல் பனை போலவே அனைத்துப் பாகங்களையும் பயன்பாட்டிற்குத் தந்து உலகை இளைப்பாற செய்கிறது தென்னை. குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகில் அதிகமாக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளாகும். இதில் இந்தியா தேங்காய் உற்பத்தியில் மூன்றாமிடம் வகிக்கிறது.
வரலாறு அறிய முடியா பழமை கொண்டது தேங்காய்!
தெற்கு பசிபிக் பகுதியான நியூ கினியாவில் இருந்து, கடலில் மிதந்து வந்த தேங்காய்களே இந்திய பெருங்கடல் மற்றும் ஆப்பிரிக்க கடற்கரை பகுதிகளில் தென்னை பரவ காரணம் என்று விஞ்ஞானிகள் யூகித்திருக்கிறார்கள்கள்.
மேலும் தேங்காய்க்கு ‘கோகோநட்’ என்ற பெயரைச் சூட்டியவர் வாஸ்கோடகாமா. உலகம் சுற்றிய அவர் தேங்காய்களை இங்கிலாந்திற்கு அறிமுகம் செய்தார். அவர் அதற்கு ‘கோகோ’ என்று பெயர் வழங்கியிருந்தார். அந்த ஸ்பானிஷ் மொழிச் சொல்லுக்கு ‘மூடிய முகம்’ என்று பொருள். அது பருப்பு வகையுடையதாக விளங்கியதால் பிற்காலத்தில் ‘நட்’ என்ற பிற்சேர்க்கையும் இணைந்து கோகோநட் என்று அழைக்கப்பட்டது.
தென்னை தனக்குள் சுவையினை மட்டும் அல்ல பல பெருமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது, போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்கு அவசர கால குளுக்கோஸ் மருந்தாகச் செலுத்தப்பட்டது, தேங்காய் தண்ணீர்தான்.
இந்து கலாச்சாரத்தில், கடவுளர்களுக்கு அர்ப்பணிப்பாகத் தரையில் போட்டு உடைப்பதால், அகங்காரத்தை அழித்துக்கொள்வதாக ஐதீகத்தால் சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் புதிதாய் ஒன்றை வாங்கும்போது பூஜிக்கவும், கோவில்களிலும், திருவிழாக்களிலும் அனைவரும் பயன்படுத்துவது தேங்காயைத்தான்.
இப்படி உலகின் பல்வேறு கலாச்சாரங்களாலும் தேங்காய் போற்றப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் ஆண்டிற்கு 20 லட்சம் கோடி தேங்காய்களுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 567 பேர் சேர்ந்து தேங்காய் சிரட்டைகளைக் கொண்டு ஓசையெழுப்பி இசைக்கச்சேரி செய்தது உலக சாதனையாக பதிவாகி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினாண்ட் மார்ககோஸ், மணிலாவில் தேங்காய் மாளிகையை கட்டினார். தென்னை மரம் மற்றும் தென்னை மரப் பொருட்களால் கட்டப்பட்டு அழகுற அலங்கரிக்கப்பட்டது இந்த தேங்காய் மாளிகை.
மத்திய பசிபிக் கடல் தீவு நாடான கிரிபாதி, தனது ராணுவ வீரர்களுக்கு தேங்காய் நாரில் உறுதியாக செய்யப்பட்ட கவச உடைகளை தயாரித்து வழங்கியுள்ளது.
‘பூலோக கற்பகத்தரு’ என்று பனை மரம் போற்றப்பட்டாலும், உலகின் நிஜ கற்பகத் தருவாக தென்னை விளங்கி வருகிறது. இத்தனை முக்கியத்துவங்களை கருத்தில் கொண்டு தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் “சீர்மிகு தென்னை சாகுபடி” என்ற தலைப்பில், 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
“ஒன்றிணைந்த, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நிலைத்திருக்கக்கூடிய வகையில் ஒரு தென்னை சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்று நடப்பாண்டின் உலக தென்னை தின பிரகடணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதை வலியுறுத்தும் வகையில், தென்னை விளைபொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவோம். அதன் மூலம், நமது வாழ்க்கையை ஆரோக்கியமான வாழ்க்கையாக மாற்றுவோம் என்று மக்கள் அனைவரும் உறுதி ஏற்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.