பார்சிலோனா அணியில் இருந்து விலகிய பிரபல நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஃப்ரான்சின் PSG (Paris Saint Germain) அணிக்கு விளையாட உள்ளார். கடந்த 21 ஆண்டுகளா பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த மெஸ்ஸி, அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்தது மட்டுமல்லாமல், 6 முறை balan de or விருதை வென்றுள்ளார்.
இந்த சூழலில், மெஸ்ஸியின் சம்பளம் அதிகமாக இருப்பதால், பார்சிலோனா அணியால் அதனை கொடுத்து சமாளிக்க முடியவில்லை. இதனால, தான் 21 ஆண்டுகளாக விளையாடின பார்சிலோனா அணியில் இருந்து, கண்ணீர் மல்க விடைபெற்றார் மெஸ்ஸி. அப்போது பேசிய மெஸ்ஸியின் வீடியோ இணையத்தில் வைரலாகி அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதில், “Good Bye சொல்லும் சூழல் வரும் என நினைக்கவில்லை. என்னால் முடிந்த அனைத்தையும் இந்த அணிக்காக தொடக்கம் முதலே கொடுத்து வந்தேன். என் வாழ்வின் மிகக் கடினமான கட்டம் இது. பேசுவதற்கு வேறு சொற்கள் ஏதும் வரவில்லை. எல்லோருக்கும் நன்றி.” எனக் கூறி டிஸ்யூ பேப்பரால் தனது கண்ணீரை துடைத்தார் மெஸ்ஸி.
இப்போது மெஸ்ஸியை விட அவர் பயன்படுத்திய அந்த டிஸ்யூ பேப்பர்தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. ஆம், மெஸ்ஸி தன் கண்ணீரை துடைத்த டிஸ்யூ பேப்பர் தற்போது ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில் அந்த டிஸ்யூ பேப்பரில் மெஸ்ஸியின் DNA பதிவாகி உள்ளதால் அதனை வைத்து குளோனிங் முறையில் மெஸ்ஸியின் திறமையை கொண்ட இன்னொருவரை உருவாக்க முடியும் எனவும் பேசப்படுகிறது. இருப்பினும் இந்த டிஸ்யூ பேப்பர் ஏலம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. அதே நேரம் அவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்ட டிஸ்யூ மெஸ்ஸி பயன்படுத்தியதுதானா எனவும் கேள்வி எழுந்துள்ளது.