மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள இகாட்பூரி என்ற இடத்தில் குடிசைக்குள் சிறுத்தை ஒன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளது.
நான்கு சிறுத்தை குட்டிகளுடன் ஒரு பெண் சிறுத்தை குடிசை ஒன்றுக்குள் இருக்கும் காட்சிகளும், நான்கு குட்டிகளும் ஒரு குடிசைக்குள் தவழ்ந்து செல்லும் காட்சிகளும் இடம்பெற்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்துப் பேசியுள்ள மகாராஷ்டிரா வனதுறை அதிகாரி கணேஷ்ராவோ ஜோலே, “இகாட்பூரியில் உள்ள ஒரு குடிசைக்குள் பெண் சிறுத்தை நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. நாங்கள் குட்டிகளை தாய் சிறுத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக காத்திருக்கிறோம். குட்டிகள் இருப்பதால் தாய் சிறுத்தையை எங்களால் பிடிக்கமுடியவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை அந்த வீடியோவுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. சிறுத்தை குட்டிகள் மிகவும் அழகாக இருப்பதாக பலர் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் வனத்தில் குட்டிகளை ஈன்று, அங்கே இருக்க வேண்டிய சிறுத்தை ஒரு குடிசைக்குள் குட்டிகளை ஈன்றிருப்பது வருத்தத்துக்குரியது எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சிறுத்தைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் அதிகம் வருவது, வனங்களை மனிதர்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பதை சுட்டுவதாகவும் உள்ளது.