கொரோனா பாதிப்பு காலங்களில் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்து வந்தார். அதனால் அவரது வாகனங்கள் பல பயன்படுத்தாமல் இருந்து வந்தன.
இதில் சமீபத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் காரின் முகப்பு பகுதியில் குருவி ஒன்று கூடு வைத்து முட்டையிட்டது. பின்னர் அதில் அமர்ந்து அடை காக்கத் தொடங்கியது. இதனைப் பார்த்த பட்டத்து இளவரசர் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்.
மேலும் கூட்டைக் கலைக்கும் விதமாக அந்த வாகனத்தைச் சுற்றி பணியாளர்கள் யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்யும் சிவப்பு நிற டேப்பை நான்கு புறத்திலும் சுற்றி வைத்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்த பறவை தனது முட்டைகளை காரின் முகப்பு பகுதியில் அடை காத்து வந்தது.
ஒரு சிறு குருவிக்காக தனது காரையே அளித்த பட்டத்து இளவரசரின் செயல் இணைய வெளியில் பரவியது. இந்த நிலையில் அந்த குருவி, அடைகாத்த முட்டைகளில் இருந்து 2 குஞ்சுகள் வெளியே வந்தது. அந்த குஞ்சுகள் முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்ததும் தாய்ப்பறவை முட்டை ஓட்டை அகற்றி, குஞ்சுகளுக்கு இரை தேடித் தர தொடங்கியுள்ளது.
இந்த அற்புத நிகழ்வை, பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ‘வாழ்க்கையில் சில நேரங்களில் சிறிய விஷயங்கள் அனைத்தையும் விட போதுமானதாக உள்ளது’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவும், வீடியோவும் இணையவெளியில் வெகுவாக பாராட்டுப் பெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கில் நெகிழவைத்த சம்பவம் இது என சமூக வலைத்தளங்களில் இளவரசருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.