வைரல்

'மளிகைக்கடைக்குச் செல்வதாக கூறி காதல் மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்த இளைஞர்' - ஊரடங்கில் ருசிகர சம்பவம்!

மளிகைக் கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு தனது மகன், காதல் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் தாயார் கடும் அதிர்ச்சியடைந்த சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.

'மளிகைக்கடைக்குச் செல்வதாக கூறி காதல் மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்த இளைஞர்' - ஊரடங்கில் ருசிகர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இதுவரை 31 ஆயிரத்து 787 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 7 ஆயிரத்து 797 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸுக்கு நாடு முழுவதும் ஆயிரத்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கொரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களைத் தவிர மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு காலத்திலும் பல விசித்திர சம்பவங்கள் நடந்து வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹூடு (26). இவர் சுவேதா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், கொரோனா காரணமாக கோவிலில் இருவரும் செய்துகொண்ட திருமணத்திற்கான சான்றிதழைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் தனது மனைவி சுவேதாவை அண்டை மாநிலமான டெல்லியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கவைத்தார்.

மேலும், இருவரும் திருமணம் செய்ததன் ஆதாரமாக விளங்கும் சான்றிதழைப் பெற ஹூடு மீண்டும் முயற்சி செய்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையில், டெல்லியில் சுவேதா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென அவரை வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவர் ஹூடுவிடம் நிலைமையை எடுத்துரைத்தார்.

இந்நிலையில், காசியாபாத்தில் வீட்டில் இருந்த ஹூடுவை அவரது தாயார் நேற்று மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஹூடு நேரடியாக தனது காதல் மனைவி சுவேதா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று அவரை அங்கிருந்து காசியாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

மளிகைப் பொருட்களை வாங்கச்சென்ற தனது மகன், இளம்பெண் ஒருவரை வீட்டிற்கு அழைத்துவந்து இவர்தான் உங்கள் மருமகள் எனக் கூறியதால் அதிர்ச்சியடைந்த ஹூடுவின் தாயார் இருவரையும் வீட்டின் வாசலிலேயே நிற்கவைத்தார்.

மேலும், தனக்குத் தெரியாமல் மகன் திருமணம் செய்துகொண்டதாலும், மளிகைக்கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு மருமகளை அழைத்து வந்ததாலும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து, தனது மகனையும், அவரது காதல் மனைவியையும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த ஷகீபாபாத் பகுதி போலிஸார் மகன் ஹூடுவையும், மருமகள் சுவேதாவை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கும்படி அந்த பெண்ணிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் ஊரடங்கு முடியும் வரை தம்பதிகள் இருவரும் டெல்லியில் உள்ள வாடகை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தி பிரச்னையை தற்காலிகமாக தீர்த்துவைத்துள்ளனர்.

ஊரடங்கில் நடந்த இந்த ருசிகர சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories