கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பொதுவெளியில் நடமாடுவது அதிகளவில் குறைந்திருக்கிறது. இதனால், பொழுதுபோக்குக்காக மக்கள் தொலைக்காட்சி மற்றும் செல்ஃபோனையே நம்பி காலத்தைக் கடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் உலகின் அனைத்து நாடுகளிலும் இணையத்தின் பயன்பாடும், தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், ஊரடங்கு காரணமாக ஐ.டி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.
உயரதிகாரிகளுடன் மீட்டிங் போன்றவற்றில் கலந்துகொள்ள வீடியோ கான்ஃபரன்கிங் செயலிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. அதேபோல, வீட்டில் உள்ளவர்கள் தங்களது நண்பர்கள் உறவினர்களுக்கு வீடியோ கால் மூலம் பேசி பொழுதைக் கழித்து வருகின்றனர்.
இது போன்ற தேவைகளுக்காக இருந்த ஜூம் செயலி சைபர் க்ரைம் தாக்குதலுக்கு ஆளாவதால், அது பாதுகாப்பானது அல்ல என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும், பயனர்கள் கூகுள் மீட் போன்ற இதர வீடியோ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
வீடியோ கால் சேவைக்கு மவுசு அதிகரித்துள்ளதால், தற்போது வாட்ஸ்-அப் நிறுவனமும் வீடியோ கால் சேவைக்கு அப்டேட் கொடுக்க முன்வந்துள்ளது. ஏற்கெனவே குரூப் வீடியோ காலில் ஈடுபட 4 பேரை மட்டுமே இணைக்க முடியும் இருந்த நிலையை மாற்றி 4 பேருக்கு மேல் வீடியோ கால் செய்யும் வகையில் புது அப்டேட்டை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாட்ஸ் அப் நிர்வாகம், “இனி, வாட்ஸ்-அப்பில், 8 பேர் வரை குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலில் பேச முடியும் அளவுக்கு அப்டேட் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி, ஆப்பிளின் iOS மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்புகளில் கிடைக்கப்பெறும். 4க்கும் மேற்பட்டோர் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில், தேவையானவர்களை தேர்வு செய்து வீடியோ, ஆடியோ கால் செய்துக் கொள்ளலாம்.
ஏற்கெனவே செயலியை அப்டேட் செய்தும், இந்த புது அப்டேட் பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் தரவுகளை பிரதி எடுத்துக்கொண்டு UNINSTALL செய்துவிட்டு மீண்டும் INSTALL செய்யும் போது படிப்படியாக புது அம்சத்தை பெறலாம்.” எனத் தெரிவித்துள்ளது.