‘கொரோனா வைரஸ்’ பாதிப்பால் உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வரும் நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் இதுவரை 2,136 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் நடவடிக்கையாக அந்நாட்டின் முக்கிய நகரங்களை மூட, பிரதமர் கியூசெப் கான்டே உத்தரவிட்டார். இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.
இந்தநிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள், பால்கனி பகுதியில் இருந்தபடி, ஒன்றாக பாட்டுப்பாடி மகிழ்ந்து வருகின்றனர். இத்தாலி தேசிய கீதம், இத்தாலிய மொழி பாடல்களை பாடி தங்கள் மனஅழுத்தத்தைப் போக்கி வரும் அந்த மக்கள், தமிழில் ‘தேவர்மகன்’ படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலைப் பாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
மக்கள் அனைவரும் அடுக்குமாடி வீடுகளில் பால்கனிகளில் நின்றுகொண்டு இஞ்சி இடுப்பழகி பாடலைப் பாடுவது போன்ற இந்தக் காட்சி வைரலாகப் பரவி வருகிறது.
சமூகவலைதளங்களில் சிலர் இது போலியான வீடியோ என்றும், சிலர் இந்த வீடியோ தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டதால் இது உண்மையான வீடியோ என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவின் ஒலிப்பதிவு, வேறொரு நிகழ்வில் எடுக்கப்பட்டது என்றும் அதன் வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில் இத்தாலியின் பல இடங்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இத்தாலியர்கள் தங்களது வீடுகளின் பால்கனியில் நின்றபடி பாடல் பாடிவரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.