ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான யுசகு மேஸவா, தனது ட்வீட்டை ரீ-ட்வீட் செய்தவர்களில் 1,000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ரூபாய் 6.50 லட்சம் பரிசாக அளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
ஜப்பானை சேர்ந்த பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஜோஜோ (Zozo). இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் யுசகு மேஸவா. யசகு மேஸவா எப்போதும் வித்தியாசமான அணுகுமுறையை சோதித்துப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்.
கலைநயம் மிக்க பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவது, ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்கிக் குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். வித்தியாசமான செயல்பாடுகளால் பிரபலமடைந்த யுசகு, இப்போது புதிய சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
புத்தாண்டின் முதல் நாளன்று தான் பதிவிடும் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில் ,1000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 1 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூபாய் 65 கோடி) பரிசாக வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, அவர் பதிவிட்ட ட்வீட், இதுவரை 43 லட்சம் ரீட்விட்களை கடந்துள்ளது. அவர் அறிவித்தபடி, ரீ-ட்விட் செய்தவர்களில் 1,000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ரூபாய் 6.5 லட்சம் பரிசாக கொடுக்க உள்ளார் யுசகு மேஸவா.
மேலும், தான் எதற்காக இவ்வாறு செய்கிறேன் என்பதை விளக்கி யூ-ட்யூபில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட நபர்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக்குகிறது என்பதை அறியும் முயற்சியாகவே இதைச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், மனிதர்களில் பணம் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பதிவை ரீ-ட்வீட் செய்ததற்கு லட்சக்கணக்கில் பணம் பரிசாக அளிக்கப்படுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.