சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காக்க, உலகத்தலைவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் குறித்து நடைபெற்ற மாநாட்டில், “நாம் அனைவரும் பேரழிவின் விளிம்பில் இருக்கின்றோம். ஆனால் அதனை உணராமல் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை பற்றி இங்கு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்” என உலகின் முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் கிரேட்டா தன்பெர்க் பேசியிருந்தார்.
காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரேட்டா தன்பெர்க்கிற்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிரேட்டா தன்பெர்க்கிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இது அபத்தமானது. கிரேட்டா தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முயலவேண்டும், பின்னர் தனது நண்பர்களுடன் நல்ல பழைய திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். Chill கிரேட்டா, Chill!” என பதிவிட்டிருந்தார்.
16 வயதான சிறுமியை அமெரிக்க அதிபர் கிண்டல் செய்வது நாகரிகமாக இல்லை எனக் கூறி ட்ரம்ப்பை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க் ட்ரம்ப்புக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
கிரேட்டா தன்பெர்க் தன்னுடைய ட்விட்டர் பயோவில், “கோபத்தைக் கட்டுப்படுத்த முயலும் இளம்பெண். தற்போது நண்பர்களுடன் நல்ல பழைய திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.