தொடர் மழை காரணமாக உற்பத்தி குறைந்ததன் காரணமாக வெங்காயத்தின் விலை அண்மை நாட்களாக அதிகரித்து வருகிறது. கிலோ வெங்காயம் மிக அதிக விலையில் விற்கப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெங்காயத்தை வெட்டினால்தான் கண்ணீர் வரும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது என பலர் புலம்பிகின்றனர்.
வட மாநிலங்களில் 200 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் வெங்காயம் தென் மாநிலங்களில் 150 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. மேலும், நாள்தோறும் தங்கம் வெள்ளி மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வது போல வெங்காயத்தின் விலையும் அதிகரித்தே வருகிறது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள STR மொபைல்ஸ் என்ற கடையில் அதிரடி ஆஃபர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது என்னவெனில், ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்பதுதான் அது.
இந்த விளம்பரம் அந்த பகுதி மக்களிடையே வைரலானதை அடுத்து வெங்காயத்திற்காக ஆயிரக்கணக்கில் ஸ்மார்ட் ஃபோன் வாங்க அந்த மொபைல் கடையில் மக்கள் குவிந்துள்ளனர். ஸ்மார்ட்போன் விலையை விட வெங்காய விலை தான் மக்களுக்கு பெரிதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக பேசியுள்ள மொபைல் கடையின் உரிமையாளர் சரவணகுமார், “பட்டுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கிலோ ஒன்றுக்கு வெங்காயம் ரூ.200 வீதம் விற்கப்படுகிறது. இயர் ஃபோன், மெமரி கார்டு கூட ரூ.200 தான்.”
“ஆனால் வெங்காயம் தான் மக்களுக்கான தேவையாக உள்ளதால் மொபைல் ஆஃபரை அறிவித்தோம். பொதுவாக இரண்டு மூன்று மொபைல்கள் மட்டுமே எங்கள் கடைகளில் ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனையாகும். இந்த விளம்பரத்துக்கு பிறகு அதை 5 மடங்குக்கு அதிகரித்துள்ளது” என கூறியுள்ளார்.