டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் மோசமான நிலையை எட்டி வருகிறது. இயற்கையாகக் கிடைக்கும் காற்றைக்கூட காசு கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் டெல்லி மக்கள்.
இந்நிலையில், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற ஆலோசனைக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், டெல்லி கிழக்கு பா.ஜ.க எம்.பி.,யும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் பங்கேற்காமல் இந்தூரில் நடந்த இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டிக்கான வர்ணனையாளராகச் சென்று இருந்தார்.
இதுமட்டுமல்லாமல், முன்னாள் வீரர்களான VVS லஷ்மணனும், கம்பீரும் இந்தூரில் ஜிலேபி சாப்பிடும் புகைப்படங்களை லஷ்மணன் தனது ட்விட்டரில் பகிந்திருந்தார்.
இதனைக் கண்ட ரசிகர்களும், டெல்லி வாசிகளும் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் காற்று மாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்காமல் கிரிக்கெட் போட்டிக்குச் சென்றதற்காக #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக்கில் கம்பீரைக் கடுமையாக சாடி பதிவிட்டனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தூரில் கம்பீர் ஜிலேபி சாப்பிட்டது சர்ச்சையானதால் டெல்லியில் பா.ஜ.க எம்.பி கவுதம் கம்பீரை காணவில்லை என Income Tax Office (ITO Area) பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.