மேற்கு வங்கத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ராணு மோண்டால் என்ற பெண், லதா மங்கேஷ்கர் பாடிய "ஏக் பியார் கா நக்மா ஹே" இந்தி பாடலை பாடி இருந்தார்.
இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அது வைரலானதும் மும்பையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவிலும் பாடி அசத்தினார் ராணு.
அதன் பிறகு பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியவைன் இசையில் 3 பாடல்களை பாடி பிரபலமான பின்னணி பாடகியாக ராணு உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஷாப்பிங் மாலுக்கு சென்ற ராணுவிடம் ரசிகை ஒருவர் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக அவரது கையில் தட்டி அழைத்து கேட்டுள்ளார்.
அதற்கு ஆட்சேபனை தெரிவித்து, அந்த பெண்ணிடம் “மேல தொட்டுதான் அழைப்பீர்களா? இப்போ நான் செலப்ரிட்டி. என்னை தொடாதீர்கள்” எனக் கடுமையாக பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. எதன் மூலம் ராணு மோண்டால் பிரபலமடைந்து உச்சாணிக் கொம்புக்குச் சென்றாரோ அதன் மூலமே தற்போது விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளார். நெட்டிசன்கள் பலர் ராணு மோண்டாலின் செயலை கண்டித்து திட்டித் தீர்த்தும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் என்னை தொடாதீர்கள் என ரசிகையிடம் ராணு மோண்டால் கூறியதைச் சுட்டிக்காடி பல மீம்களும் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.