அக்.,27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக தயாராகி வருகிறார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், 2 நாட்களுக்கு முன்பே சொந்த ஊருக்குச் செல்லவிருப்பதால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும், வாரக் கடைசி நாள் மற்றும் பண்டிகை நேரம் என்பதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் வசூல் வேட்டை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கூடுதல் கட்டண வசூலை கண்டித்து நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டரில் #ReduceDiwaliBusFare என்ற ஹேஷ்டேக்கில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், பிகில் பட சிறப்பு காட்சிக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக விலை வசூலிப்பதாகக் கூறி சிறப்பு காட்சியை தமிழக அரசு ரத்து செய்தது.
ஆனால், சிறப்புக் காட்சிக்கு வசூலிக்கும் கட்டணத்தைவிட பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர் என்ற ரீதியில் விஜய் ரசிகர்கள் மேற்குறிப்பிட்ட ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, #ReduceDiwaliBusFare என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னிலை பெற்றது.