நடப்பாண்டில் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. பொருளாதார அறிஞர்கள் அபிஜித் பானர்ஜி அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகிய மூன்று பேரும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் அபிஜித் பானர்ஜி இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பெருமை.
இதில், அபிஜித் பானர்ஜி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். அங்கு கொல்கத்தாவில் உள்ள பிரசிடன்சி பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொருளாதாரம் படித்துள்ளார். பின்னர், தனது முதுநிலைப் படிப்பை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பயின்றார். அதனையடுத்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றார்.
முன்னதாக, அபிஜித் பானர்ஜி ஜே.என்.யூ மாணவராக படித்தகாலத்தில் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் போராட்டங்களில் தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்ட நபராகத் திகழ்ந்துள்ளார்.
1983-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய மாணவர் சேர்க்கை கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரின் அலுவகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலிஸார் வந்ததால் மாணவர்கள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி மாணவர்களுக்கும் போலிஸாருக்கு கைகலப்பு ஏற்பட்டது.
மாணவர் அமைப்பில் செயல்பட்ட சிலரை போலிஸார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். அதில் தனியாக அடைக்கப்பட்ட மாணவர்களில் அபிஜித் பானர்ஜியும் ஒருவர். கடும் காயங்களுடன் 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அரசியல் கட்சியினர் தலையீட்டினால் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அப்போது போடப்பட்ட வழக்கு குறித்தும், 10 நாட்கள் சிறை தண்டனை குறித்தும் ஆங்கில நாளிதழுக்கு அபிஜித் பேட்டியளித்துள்ளார். மாணவர் போராட்டத்தின் போது டெல்லி திகார் சிறையில் இருந்தவருக்கு இன்று நோபல் பரிசு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலர் கருத்துத் தெரிவிக்கன்றனர்.