மலர் டீச்சரை நம்மால் மறக்க முடியுமா? ‘பிரேமம்’ திரைப்படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி தமிழ், மலையாள ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்தவர் நடிகை சாய் பல்லவி.
தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார். தமிழில் 'கரு' படம் தொடங்கி, தனுஷுடன் இணைந்து 'மாரி 2' படத்தில் நடித்து 'ரவுடி பேபி' குத்துப்பாடலுக்கு நடனமாடினார். உலகெங்கிலும் ரசிகர்களின் கொண்டாட்ட பாடலாக இந்த பாடல் மாறியது. இதனைத்தொடர்ந்து மலர் டீச்சர் சாய்பல்லவி, ரவுடி பேபி என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
சாய் பல்லவி சூர்யாவுடன் 'என்ஜிகே' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தெலுங்கு நடிகர் வருண் தேஜ் ட்விட்டர் தளத்தில் 'கிரீன் இந்தியா சேலன்ஞ்' என்றழைக்கப்படும் சவாலை நிறைவேற்றும்படி சாய் பல்லவியை டேக் செய்திருந்தார்.
இதை ஏற்ற சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு தோட்டத்தில் அவர் மரம் நடுவது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். மேலும், காற்றின் தூய்மைத்தன்மை மோசமான நிலைக்குச் செல்கிறது. நாம் எடுப்பதை விட கொடுப்பது குறைவாக உள்ளது. எனவே அனைவரும் ஒரு மரமாவது நட வேண்டும் எனப் பதிவிட்டு தனது ரசிகர்களிடம் சபாஷ் பெற்றுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவினை, நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் ராணா ஆகியோருக்கு டேக் செய்து சவாலை ஏற்கும்படி குறிப்பிட்டிருக்கிறார் சாய் பல்லவி.
கிரீன் இந்தியா சேலன்ஞ் என்பது தெலங்கானா மாநில அரசின் ஹரித்தா ஹரம் மரம் நடும் திட்டத்திற்கு உதவி செய்யும் நோக்கில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
இதன்மூலம் 10 கோடி மரம் நட வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். அதைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் கிரீன் இந்தியா சேலஞ்சை வலியுறுத்தி மரம் நடத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ‘ரவுடி பேபி’ சாய்பல்லவி தனது சேலன்ஞ் நிறைவேற்றப்பட்ட மகிழ்வில் புகைப்படத்தை பதிவிட்டிருப்பதை தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலக பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.
ரவுடி பேபி இனிமேல் ‘கிரீன் பேபி’ என்று அழைக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.