பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்காக மாமல்லபுரத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு காரில் செல்ல இருக்கிறார். அதுவும், அவரது பிரத்யேக காரிலேயே பயணிக்க இருக்கிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார்கள் போயிங் 747 விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்த கார்களை சென்னையின் சாலையில் ஓட்டி சோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் பயணிக்கவிருக்கும் கார் ‘FAW’ என்ற நிறுவனத்தால், சீன அதிபருக்காகவே பிரத்யேகமாக அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஹாங்கி 5’ கார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
‘ஹாங்கி 5’ காரில் சீன அதிபரின் பாதுகாப்புக்காக துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க முடியாத அளவுக்கு கண்ணாடிகள் உள்ளன. மேலும் ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு தாக்கினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறும், கன்னி வெடி தாக்குதல்களிலிருந்து காக்கும் வகையிலான பாதுகாப்பு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த காரில் உள்ள சேட்டிலைட் போன் மூலமாக அவசர நேரத்தில் உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளமுடியும். அதேபோன்று, ஏராளமான ரகசிய பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 6 தானியங்கி கியர்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், 110 லிட்டர் நிரப்பும் வகையிலான பெட்ரோல் டேங்க் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காரின் விலை ரூ.5.4 கோடி என தெரியவருகிறது.