நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், கொங்கொனா சென் சர்மா, சவுமிதா சாட்டர்ஜி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கூட்டாகச் சேர்ந்து அந்த கடிதத்தில் நீண்ட கோரிக்கை ஒன்றை வைத்தனர்.
குறிப்பாக அதில், “நாட்டில் மத வெறுப்பை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, அர்பன் நக்சல் என முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது.
எந்த ஒரு குடிமகனும் தமது சொந்த தேசத்தில் உயிர் அச்சத்துடன் வாழக்கூடாது. ராமர் பெயரில் நடைபெறும் கும்பல் வன்முறையைத் தடுக்கவேண்டும்” போன்ற முக்கிய பிரச்னைகளை அந்த கடிதத்தில் முன்வைத்து தீர்வு காணவேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்தக் கடிதத்தை எழுதியதற்காக மணிரத்னம், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தால் தேசதுரோக வழக்குப் பதிவு செய்ததற்கு அரசியல் கட்சியினர் ஜனநாயக அமைப்பினர் என பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்து வரும் பி.சி.ஸ்ரீராம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தேசதுரோகத்தின் பொருள் என்ன, யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால் அது தேசத்துரோகமா?
இங்குள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. அப்படியானல், அவர்கள் அனைவரும் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டுமா? மாற்றுக்கருத்து கூறுவோரை மவுனமாக்க முற்சிப்பது ஆபத்தானது.
நம் கருத்தைச் சொன்னால் அது தேச துரோகமா? அப்படி என்றால் நாம் அமைதியாகத்தான் இருக்கவேண்டும், ஏனென்றால் அவர்கள் கையில் அதிகாரம் இருப்பதால், அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.