மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பய்குரியில் உள்ள பனார்ஹட் - நக்ராகடா ரயில் வழித்தட பகுதி, யானைகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால், 2015-16ம் ஆண்டில் அந்த வழியே செல்லும் ரயில்கள் 25 கி.மீ வேகத்திலேயே இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அதன் பின்னர், அப்பகுதியில் விபத்துகள் குறைந்ததால் ரயில் இயக்கப்படும் வேகம் மணிக்கு 50 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன் தினம் காலை 7.45 மணியளவில் பனார்ஹட் - நக்ராகடா வழித்தடத்தில் சிலிகுரியில் இருந்து துப்ரி வரை செல்லும் இன்டர்சிட்டி ரயில் வழக்கம் போல் 50 கி.மீ வேகத்தில் சென்றுள்ளது. அப்போது அவ்வழியே ரயில்வே தண்டவாளத்தைக் கடந்த பெண் யானை ஒன்றின் மீது பயங்கரமாக ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 30 மீட்டர் தூரத்துக்கு யானை ரயிலில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. ரயில் மோதியதால் அந்த யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், யானை மீது மோதியதில் ரயிலின் முன் பகுதி பலத்த சேதத்திற்குள்ளாகியது.
இதனையடுத்து, விபத்து நடந்த தண்டவாளத்தில் இருந்து மெதுவாக ஊர்ந்து சென்ற அந்தப் பெண் யானை ரத்தம் வழிய வழிய ஒரு மரத்தின் அருகே எழுந்துகொள்ள முடியாமல் தவித்துக் கிடந்துள்ளது.
இந்தக் கோர நிகழ்வை ரயிலில் வந்த பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, பலத்த காயமுற்ற யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த நிலையில், யானைக்கு உள்காயம் அதிகமாக இருந்ததால் நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது.
இந்த செய்தியறிந்த பலர், தங்களது இரங்கல்களையும், வேதனையையும் பதிவுகள் மூலம் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு காட்டைப் பாதுகாக்க ஒரு யானை இருந்தால் போதும் என்ற சொல்லாடல் போய், இப்போது யானையைப் பாதுகாக்கவே பெரும்படை தேவைப்படும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.