வைரல்

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைக்க 1000 ரூபாய் லஞ்சம் : பரபரப்பை ஏற்படுத்தும் ஆடியோ !

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான சட்டவிரோத பேனர்களை வைப்பதற்கு மாநகராட்சி ஊழியர்களுக்கு ரூ.1000 லஞ்சம் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைக்க 1000 ரூபாய் லஞ்சம் :  பரபரப்பை ஏற்படுத்தும் ஆடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மகனின் திருமணத்துக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து போலிஸார் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது எதிர்க்கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த நிலையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து ஒரு வாரம் ஆகியும் தலைமறைவாக உள்ள ஜெயகோபாலை போலிஸார் இன்னும் கைது செய்யவில்லை. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கரணை காவல் உதவி ஆய்வாளரான பாஸ்கர் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் என்பவரும் பேசிக்கொண்ட ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், “சட்டவிரோதமாக பேனர் வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளதாக காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பான அறிக்கையை காவல் ஆணையருக்கு அனுப்ப இருப்பதாகவும் கூறுகிறார்.

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைக்க 1000 ரூபாய் லஞ்சம் :  பரபரப்பை ஏற்படுத்தும் ஆடியோ !

மேலும், விபத்து நடைபெறுவதற்கு முன் தினம், இதுபோன்ற பேனர்கள் வைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாகவும் அதில் பேசப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சுபஸ்ரீ மரணம் தொடர்பாக பள்ளிக்கரணை போலிஸாரும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலிஸாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த இருவழக்குகளையும் போலிஸார் தனிதனியாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் தானாக வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், அதிகாரிகளிடம் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பினர். மேலும், வழக்கு விசாரணையை நேரடியாக கண்காணிப்போம் என நீதிபதிகள் தெரிவித்திருப்பதால் இந்த வழக்கில் போலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும் அ.தி.மு.க பிரமுகர் கைது செய்யப்படவில்லை.

மேலும் சுபஸ்ரீ மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்த பேனரை வைப்பதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதும், ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்தும், தற்போது வெளியாகியுள்ள ஆடியோ விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories