நிலவில் ஆய்வு செய்ய அதன் அருகில் சந்திரயான் 2 விண்கலம் சென்றிருக்கும் வேளையில், பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி நிலவில் விண்வெளி வீரர் நடப்பது போல எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் உலா வந்தது.
இந்த நிகழ்வை பெங்களூருவைச் சேர்ந்த பிரபல 3D ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமி என்பவர் உருவாக்கி தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டிருந்தார்.
ஓவியரின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்களும் முழுமையான ஆதரவும், வரவேற்பும் அளித்தனர். சமூகம் சார்ந்த பிரச்னைகளை தனது ஓவியக்கலையின் மூலம் வெளிப்படுத்தியும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார் அவர்.
பெங்களூருவில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைக்க ஓவியர் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் வகையில் மாநகர அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்தனர்.
இந்த நிலையில், பாதல் நஞ்சுண்டசுவாமியின் வீடியோ வைரலானதால் மெக்சிகோவைச் சேர்ந்த நபர் ஒருவர் தானும் இதேபோல் வீடியோ எடுத்து வெளியிடலாமா எனக் கேட்டு, மெக்சிகோவில் பள்ளமாக உள்ள சாலையை சீர் செய்ய வலியுறுத்தி விண்வெளி வீரர் உடையை அணிந்து சென்று வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓவியர் பாதல் ஷேர் செய்துள்ளார். தற்போது இதுவும் வைரலாகி வருகிறது. மேலும், ஓவியரின் முயற்சிக்கு பலரும் பாராட்டும், வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.