நிலவின் தென் துருவத்தின் கடினமான பகுதியில் ஆய்வு செய்வதென்பது சாதாரண நிகழ்வு அல்ல. நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியதில் வேண்டுமானால் இந்தியா 4வது இடத்தில் இருக்கலாம். ஆனால் அதன் தென் துருவப்பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு இந்தியாதான்.
ஆதலால், நிலவில் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நாடு முழுவதும் மட்டுமன்றி, சர்வதேச நாடுகளாலும் உற்றுநோக்கப்பட்டது. இருப்பினும் நிலவை நெருங்கும் சமயத்தில் சில தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் லேண்டரின் நிலை குறித்து அறியமுடியாமல் போனதாக இஸ்ரோ அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தலைவர்கள் என பலரும் இஸ்ரோவின் முயற்சிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் இஸ்ரோ மக்களின் பணத்தை வீணடித்துவிட்டதாகப் பொய் பிரசாரத்தையும் விஷம கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், அது உண்மையல்ல. இதுதொடர்பான வெளியான தகவலில், 1981ல் இந்தியா விண்வெளித்துறை ஆராய்ச்சியில் அடி எடுத்து வைத்தது. அன்றைய காலகட்டத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத காலத்தில், விக்ரம் சாராபாய், கலாம் உள்ளிட்டவர்களின் பெரு முயற்சியால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சு வேகமாக வளர்ந்தது. பல செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வெற்றி அடைந்துள்ளது.
அந்த வகையில், இஸ்ரோவில் 2016 முதல் 2019 வரை வணிக ரீதியாக பல நாடுகள் ஒன்றிணைந்தது. சொந்த செயற்கைக்கோள்கள் மட்டுமன்றி, பிற நாடுகளுடைய 239 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ உதவியது. அதன் மூலம் சுமார் 6 ஆயிரத்து 289 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. அதனால், இந்திய அரசுக்கு குறிப்பிடத்தக்க வருவாயை இஸ்ரோ பெற்றுக்கொடுத்துள்ளது.
இதுபோல இஸ்ரோவிற்கு கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு தொகையை இந்திய அரசு இஸ்ரோவின் ஆராய்ச்சிக்கு கொடுக்கிறது. தங்களின் ஆராய்ச்சிக்கு தேவையான தொகையை இஸ்ரோ அரசிடம் இருந்து வாங்குவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கலாமா, இந்த தேசத்திற்கு விண்வெளி ஆராய்ச்சி முக்கியமா என கேட்கும் அதிபுத்திசாலிகளுக்கு ஒரு நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியும், அடிப்படை கட்டமைப்பும் வேறு தளத்தைச் சார்ந்தவை என்று இஸ்ரோ புரிய வைத்துள்ளது.