ரிவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள்கள் ரிவோல்ட் ஆர்.வி 400 மற்றும் ஆர்.வி 300 ஆகியவற்றை ஆகஸ்ட் 28ம் தேதி அறிமுகப்படுத்தியது.
ரிவோல்ட் ஆர்.வி 400 மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கான முன்பதிவு ஏற்கனவே ரிவோல்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கிவிட்டது. இந்நிலையில், இந்த பைக்குகளுக்காக பிரத்யேகமான செல்போன் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
அந்த செயலி my revolt என்ற பெயரில் கூகுள் பிளேஸ்டோரில் உள்ளது. இந்த செயலி மிகவும் எளிதான வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பைக்கின் உரிமையாளர் இந்த செயலியை தனது போனில் பதிவிறக்கம் செய்து பைக்கின் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ச்சருடன் இணைத்துக் கொள்ளலாம்.
ஆர்.வி 400 மற்றும் ஆர்.வி 300 பைக்குகளில் ஈக்கோ,நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மூன்று மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த செயலி மூலம் டிரைவிங் மோடுகளை மிக எளிதாக மற்ற முடியும். பெட்ரோல் பைக்குகள் போல கியர் கிடையாது. மேலும், நைட்ரோ என்ற டிரைவிங் மோடையும் விரைவில் வழங்க உள்ளது. இதன்மூலம் இந்த பைக்கின் உட்ச வேகம் மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் ஈக்கோ மோடில் 156 கி.மீ பயணிக்கலாம்.
பெட்ரோல் பைக்குகளை போல சைலன்சர் சத்தத்தை மின்சார பைக்கிலும் செயற்கையாக மாற்றலாம். ஆனால் அதற்கு மெக்கானிக்கல் வேலைகள் தேவையில்லை. செயலி மூலம், ஒரே டச்சில் நமக்கு பிடித்த சத்தத்தை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான ஸ்பீக்கர் மற்றும் ஆடியோ சிஸ்டமும் இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கிறது. Revolt, Roar, Rebel மற்றும் rage ஆகிய நான்கு விதமான சைலன்சர் சத்தத்தை இந்த செயலி மூலமாக மாற்ற முடியும்.
மேலும், ரிவோல்ட் ஆர்.வி பைக்குகளின் பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் இந்த செயலி எச்சரிக்கை செய்யும். மேலும் சார்ஜ் குறைந்தால் அருகிலுள்ள ரிவோல்ட் நிறுவனத்தின் பேட்டரி நிலையத்திற்கு வழிகாட்டும். அங்கு முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகளை மாற்றிக் கொள்ளலாம். வரும் டிசம்பர் 31ம் தேதி வரை சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகளை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் கட்ட வேண்டி இருக்கும்.
மேலும், இந்த பைக்குகளை குரல் கட்டளைகள் வழியாக இயக்க முடியும். இதற்காக பைக்குடன் இணைக்கப்பட்ட ஹெல்மெட் ஒன்று வருகிறது. ஹெல்மட்டில் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மின்சார பைக்கை குரல் வழியாக இயக்கமுடியும்.
இந்த மின்சார பைக்குகள் சிறப்பு கட்டண திட்டத்தின் கீழ் விற்கப்படுகிறது. ஈ.எம்.ஐ அல்லது ஒரே தொகையாக செலுத்துவதற்கு பதில் 37 மாத காலத்திற்கு மாதாந்திர தொகையை செலுத்த வேண்டும். ஆர்.வி 400 மாதத்திற்கு ரூ .3,499 ரூபாயும் ஆர்.வி 300 மாதத்திற்கு 2,999 ரூபாயும் செலுத்த வேண்டும். மேலும், இந்த வண்டி 5 ஆண்டுகள் மற்றும் 75000 கி.மீ உத்தரவாதத்துடன் வருகிறது.