டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜிக்ரா மாலிக் என்ற 11 மாத குழந்தை, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. வீட்டின் கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் அதன் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் குழந்தையின் காலில் எலும்பு முறிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், காலில் கட்டுபோட மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அந்த குழந்தை, சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் மருத்துவர்களை படாதபாடு படுத்தியது.
குழந்தைக்கு எவ்வாறு சிகிச்சை அழிப்பது என குழம்பிப் போயிருந்த மருத்துவர்களுக்கு குழந்தையின் தாய் ஒரு யோசனை ஒன்றை கூறியுள்ளார். அந்த ஆலோசனையின் படி குழந்தைக்கு மிகவும் பிடித்தமான பொம்மைக்கு சிகிச்சை அளிப்பது போல காலில் கட்டு போட்டனர்.
அதைப்பார்த்த குழந்தை மருத்துவர்களின் சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைத்துள்ளது. தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையும், பொம்மையும் ஒன்றாக சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.