ட்விட்டர் சமூக வலைதளத்தின் சி.இ.ஓ ஜேக் டோர்சியின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து இனரீதியான கருத்துகள், வெடிகுண்டு மிரட்டல்கள் ஆகியவற்றைப் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பிரபலமான ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான ஜேக் டோர்சியின் ட்விட்டர் பக்கத்தில் திடீரென இனவெறி கருத்துக்களும், ஹிட்லரின் நாசி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துகளும் பதிவிடப்பட்டன. “ஹிட்லர் வாழ்க”, “ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு உள்ளது” என்பது உள்ளிட்ட ட்வீட்கள் பதிவிடப்பட்டன.
இந்த ட்வீட்டுகள் அவரைப் பின்தொடரும் பல லட்சக்கணக்கான ட்விட்டர் பயனாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் அவரது கணக்கு மீட்கப்பட்டு அந்த ட்வீட்டுகள் நீக்கப்பட்டன. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம், ஜேக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தது.
ட்விட்டர் சிஇஓ-வின் கணக்கையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ட்விட்டர் நிறுவனத்தால், எங்கள் கணக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் எனக் கேள்வியெழுப்பிய ட்விட்டர் பயனாளர்கள் அந்நிறுவனத்தை கடுமையாக கடுமையாக விமர்சித்தனர்.
இதைத்தொடர்ந்து, தங்களது சொந்த பாதுகாப்பு அமைப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை எனவும், ட்விட்டர் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண் மூலமாக கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
இருப்பினும், சமூக வலைதளங்களும், தேடுபொறிகளும் தனிமனிதர்கள் குறித்த தகவல்களைத் திருடி விற்பதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அரசியல் கட்சிகளுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் தனிநபர் தகவல்கள் விற்கப்பட்ட நிகழ்வுகள் அம்பலமாகி வரும் நிலையில், பாதுகாப்புக் குறைபாடுகள் வெளிப்பட்டுள்ளது சமூக வலைதள பயனாளிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.