உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை நிறுவியுள்ளன. இந்திய அளவில் நொய்டா தொழில் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் நகரமாக மாறி உள்ளது.
மேலும் நொய்டா புறநகர் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதாலும், டெல்லிக்கு நெருக்கமாக அமைந்துள்ளது என்பதாலும் பல நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் அவர்களின் இந்திய கிளை அலுவலகங்கள் இங்குள்ளன. மென்பொருள் துறையில் மேம்படுத்துவதற்கு இந்திய அரசால் நிறுவப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா தலைமை அலுவலகத்தை நொய்டா கொண்டிருக்கிறது.
இப்படி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் செலுத்திய கவனத்தை பாதுகாப்பில் செலுத்த தவறவிட்டுள்ளனர். அதன் விளைவாகவே இன்று அப்பகுதியில் உள்ள மால் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நொய்டாவின் செக்டர் 25 ஏவில் உள்ள ஸ்பைஸ் மாலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது வரை தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
தீப்பிடித்து கட்டிடம் முழுவதும் பரவுவதற்கு முன்னதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் எந்த உயிர்சேதம், மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என கூறியுள்ளனர். நொய்டாவில் கடந்த வாரம் இதைப்போன்று ரசாயன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.