உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் அவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அந்தப் பெண்ணுக்கு படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல், அவரை தரையில் படுக்குமாறும் இல்லையென்றால் வீட்டிற்குச் செல்லுமாறும் திட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஷாஜகான்பூர் மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங், அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்துள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட பெண் “எனக்கு இங்கு முறையான வசதிகளை செய்து கொடுக்கவில்லை” எனப் புகார் அளித்துள்ளார்.
ஆட்சியர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல் “இது உங்களுக்கு எத்தனையாவது குழந்தை” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்தப் பெண் நான்காவது குழந்தை என்று பதில் அளித்துள்ளார்.
உடனே ஆட்சியர், “ இது உங்களுக்குத் தேவையா? இரண்டு குழந்தைகள் போதாதா? இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வெட்கமாக இல்லையா? ” என மோசமான முறையில் வசைபாடியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன பெண் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார்.
குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தலாம்; அதற்காக கர்ப்பிணிப் பெண்ணை கடுமையாக விமர்சிப்பதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உதவி கேட்கும் மக்களுக்காக உரிய பணியாற்றுவதுதான் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் கடமை. ஆனால் ஆட்சியர் அதனை உணராமல் நடந்துக்கொண்டது சமூக வலைதளங்களில் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.