பா.ஜ.க ஆட்சியில் சமூக வலைதளங்களில் இந்துத்துவா கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. பா.ஜ.க-விற்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்களை சமூக வளைதளங்களில் மோசமான முறையில் விமர்சிக்கும் போக்கை பா.ஜ.க ஆதரவாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதன் காரணமாகவே சில நடிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறி வருகின்றார்கள்.
இந்நிலையில் நடிகர் மாதவன் சுதந்திர தினத்தன்று சடங்கு நிகழ்வொன்றை தனது வீட்டில் கொண்டாடினார். அப்போது எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து மற்றவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
நடிகர் மாதவன் பதிவிட்டிருந்த புகைப்படத்தில், அவரது வீட்டு பூஜை அறையில் இந்து கடவுள்களுக்கு பக்கத்தில் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் சிலையும் இருந்தது. பலர் இதற்கு பாராட்டுகளை தெரிவித்தாலும் சிலர் அதனைக் கடுமையாக விமர்சித்தனர். அதில் விமர்சனம் செய்த ஒருவருக்கு நடிகர் மாதவன் பதிலளித்தது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
நடிகர் மாதவன் புகைப்படத்தின் கீழ் ஒருவர், “உங்கள் பின்னால் உள்ள பூஜை அறையில் இந்து கடவுள் பக்கத்தில் ஏன் சிலுவை உள்ளது. நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்து கடவுள்களின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? இது நீங்கள் நடத்தும் கபட நாடகம். எங்களின் மதிப்பை இழந்துவிட்டீர்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாதவன் தெரிவித்திருப்பதாவது, “உங்களைப் போன்ற நபர்களிடம் இருந்து எந்த மரியாதையையும் நான் எதிர்பார்க்கவில்லை, நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என நம்புகிறேன்.
நல்லவேளை, அந்தப் புகைப்படத்தின் அருகில் உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராக மாறிவிட்டீர்களா என கேட்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என கிண்டலாக பதிலளித்துள்ளார்.
மேலும், “நான் தர்ஹாக்களுக்குச் சென்று ஆசி பெற்றுள்ளேன். ஏன், உலகில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆசி பெற்றுள்ளேன். எங்கள் வீட்டில் அனைத்து மதங்களும் சம்மதம். எனது சிறு வயதில் இருந்தே இப்படித்தான் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆம், எனது அடையாளத்தைப் பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனது மகனும் இதனைப் பின்பற்றவார் என நம்புகிறேன். நான் தர்ஹாவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன். அருகில் கோயில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது” என்றும் மாதவன் தெரிவித்துள்ளார். மாதவனின் இந்த பதில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.