மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சுஷ்மா சுவராஜ் தனது பொதுவாழ்வில் மற்றவருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். தன்னுடைய உடை விவகாரத்திலும் அவருக்கென தனிப்பட்ட பாணியை அவர் கடைபிடித்து வந்தார். கதர் மற்றும் பருத்தி புடவைகளை அணியும் அவர், புடவைக்கு மேல் ஒரு மேலங்கி அணிந்து தன்னை வித்தியாசப்படுத்தி காண்பித்து வந்தார். அவருடைய ஆடை அலங்காரம், நேர்த்தி போன்றவை மற்றவரை வியக்க வைக்கும்.
அந்த வகையில் அவர் தினந்தோறும் வெவ்வேறு வண்ணங்களில் புடவை அணிவதை வழக்கமாக கொண்டு வந்தார். நாள்தோறும் வண்ணம் என்ற இலக்கணப்படி ஆடை அணிந்து வந்தார். திங்கள் கிழமை வெள்ளைநிறப்புடவையும், செவ்வாய் கிழமை சிவப்பு நிறப் புடவையும், புதன் கிழமை பச்சை நிறப்புடவையும், வியாழக் கிழமை ஊதா நிறப்புடவையும், வெள்ளிக்கிழமை நீல நிறப்புடவையும் அணிவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கு இந்த வண்ணக் கட்டுப்பாடுகள் இல்லை. ராசிப்படி அவர் புடவை அணிந்தார் என்றும், இந்த வண்ண ஆடைகளே அவரது விருப்பம் என்றும் தெரிகிறது.
சுஷ்மா சுவராஜின் இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. இன்று புதன் கிழமை என்பதால் அவர் வழக்கமாக புதன்கிழமை அணியும் ‘பச்சைக் கலர்’ புடவை அவரது உடலுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.