அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த வெள்ளம் மாநிலத்தையே முற்றிலும் முடக்கியது. பல இடங்களில் ஆற்றின் தடுப்பணைகள் உடைந்தது. அதனால் தண்ணீர் மக்கள் பகுதியில் சூழ்ந்து பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது.
இந்த வெள்ளத்தால் 90க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளிவந்து. மேலும் காசிரங்கா தேசியப் பூங்கா நீரில் மூழ்கியது. இந்த பூங்காவில் இருந்த காண்டாமிருகங்கள் மற்றும் யானைகள் உட்பட 20க்கும் மேற்பட்ட விலங்குகள் மரணம் அடைந்துள்ளன.
வெள்ளம் வந்த பல இடங்களில் சிறிய பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டது. அதனால் தற்போது வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. மாநிலம் வெள்ள பாதிப்புகளில் இருந்து தற்போது வரை மீளவில்லை.
இந்நிலையில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில், அம்மாநில அரசு பள்ளிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தினமும் கடுமையான சவால்களையும், நெருக்கடியையும் சந்தித்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
குறிப்பாக கச்சோமரி தொடக்கப்பள்ளி இருக்கும் பகுதியில் உள்ள பாலம் நீரில் அடித்து சென்றதால் அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் வாழை மர தண்டுகளை கட்டி ஒரு சிறிய படகு மூலம் ஆற்றைக் கடக்கிறார்கள். அந்த படகை அப்பகுதி மக்கள் தண்ணீருக்குள் இறங்கி இழுத்துச் செல்கின்றனர். சில நேரங்களில் படகு உடைந்தோ, அல்லது கவிழ்ந்தோ மாணவர்கள் தண்ணீரில் விழுந்துவிடும் ஆபத்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சர்வன் குமார் ஜா கூறுகையில், “ வெள்ளம் ஏற்பட்ட பிறகு முறையான வடிகால் வசதி இல்லாததால் மாணவர்கள் படிக்கும் கச்சோமரி தொடக்கப்பள்ளியில் சுமார் 1 முதல் 1.5 அடி மழை நீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இங்கு பாலம் இல்லாததால் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரும் போது 45 அடி அகலமுள்ள ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளது.
சில மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது ஆற்றின் குறுக்கே நீந்திச் செல்கிறார்கள். அல்லது மாணவர்களின் பெற்றோர்களால் தோளில் சுமந்து ஆற்றைக் கடக்கிறார்கள். சில நேரத்தில் பெற்றோர்களும் சேர்ந்து நீரில் முழ்கும் ஆபத்தும் ஏற்படுகிறது. அதனால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வாழை மரத்தின் தண்டுகளை பயன்படுத்தி ஆற்றைக் கடந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு பல முறை தகவல் கொடுத்துவிட்டோம், அதில் மாணவர்களுக்கு மட்டுமாவது சிறிய ரக படகுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தினமும் மாணவர்கள் இவ்வாறு பயணம் செய்வதால் மாணவர்கள் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள்.
கடந்த நான்கு மாதங்களாக இந்த நிலைமை நீடித்து வருகிறது. தற்போது மழையில்லாததால் ஆற்றில் ஆழம் குறைவாக உள்ளது. ஆனால் மழையின் போது தண்ணீர் அதிகரிக்கும். இந்த மோசமான சூழலை அரசு பரிசீலனைக்கு எடுத்து புதிதாக பாலத்தை கட்டவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.