நாம் இதுநாள் வரை திருடன் பற்றியும், திருடன் விட்டுச் சென்ற தடயத்தைப் பற்றியும் புலனாய்வுத் தகவல்களை படித்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். அதை எல்லாம் தாண்டி கடலூரில், திருட வந்த இடத்தில் திருடன் செய்த காரியம், பார்ப்போரை சிரிக்க வைத்திருக்கிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள மந்தாரக்குப்பம் பகுதியில் சிறிய மளிகைக் கடை ஒன்றை, ஜெயராஜ் என்பவர் நடத்தி வருகிறார். இவர் நேற்றைய தினம் பகல் முழுவதும் கடையிலிருந்து வியாபாரம் பார்த்து விட்டு, இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
வழக்கம் போல மறுநாள் காலையில் (இன்று) கடைக்கு வந்த போது கடையில் உள்ளப் பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் மேற்கூரை துளையிடப்பட்டிருந்தது.
அந்த துளை வழியே திருடன் நுழைந்துள்ளது தெரியவந்திருக்கிறது. கொள்ளையடிக்க வந்த திருடன் கடையில் இருந்த கல்லாப் பெட்டியில் பணத்தைத் தேடியிருக்கிறான். ஆனால், அம்மஞ்சல்லிக் கூட தேரவில்லை. முந்தைய நாள் கலெக்ஷன் அனைத்தையும் கடை உரிமையாளர், வீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறார். கடையில் பணம் இல்லாத விரக்தியில், கத்தியால் அரசி மூட்டை, மாவு மூட்டைகளைக் கிழித்துள்ளான் அந்த திருடன்.
ஆனாலும் திருடனின் ஆத்திரம் அடங்கவில்லை. அங்கிருந்த சிட்டையில், "உயிரை பணயம் வச்சு திருட வந்தா காசு இல்லாமல் கல்லாவைத் தொடச்சி வச்சு என்னை ஏமாற்றலாமா. அதுக்குதான் இந்த குரங்கு வேலை” என விரக்தியில் எழுதிவைத்துச் சென்றுள்ளான்.
இந்த கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களுக்கு திருட்டு பயத்தை ஏற்படுத்தியிருந்தாலும், திருடன் எழுதிய சுவாரசியமான கடிதம் நகைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.