லண்டனில் இருக்கும் எட்வர்ட்டும் , ஆண்டிப்பட்டி ஆறுமுகமும் இருந்த இடத்தில் இருந்தே இணைத்த பெருமை , பேஸ்புக் என்ற ஒற்றை தளத்தையே சாரும். இப்போது Twitter, Whatsapp என எத்தனையோ செயலிகள் இருந்தாலும் அடுக்கிக்கொண்டு போனாலும் அத்தனைக்கும் முன்னோடி என்றால் அது ஃபேஸ்புக் தான்.
பல்கலைகழக மாணவர்களாக இருந்தபோதே மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது நண்பர்களால் கடந்த 2004 ஆண்டு ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள உருவாக்கப்பட்டதுதான் ஃபேஸ்புக். ஆனால், உலகம் முழுவதும் இன்று பலருக்கும் அதுதான் பேவரைட்.
பலரின் தகவல்களைச் சரியாகச் சொல்வதிலும் , நமக்கு மறந்து போன நண்பனின் பிறந்தநாளை மறக்காமல் நினைவுபடுத்தி பலரின் நட்பு பாலங்களுக்கு காரணமாக இருப்பது ஃபேஸ்புக் வயது 15. வருடங்கள் உருண்டோடினாலும் ஃபேஸ்புக்கில் இணையும் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் புது புது வசதிகள்தான். இதன் விளைவாக இன்று உலகம் முழுவதிலும் ஆக்டிவ் பயனாளர்களாக கிட்டத்தட்ட 230 கோடி கணக்குகள் இருக்கிறது.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் தனிநபர் ரகசியம் (Privacy Data) காப்பதில் உள்ள விதிமுறைகளை மீறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திருட்டு குறித்து பயனாளர்களுக்கு தெரிவிக்காமலும் மறைத்திருக்கிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் தனி உரிமையை பாதுகாப்பதில் சர்ச்சையில் சிக்குவது இந்நிறுவனத்திற்கு வழக்கமான ஒன்று என்றாலும், தற்போது உருவாகியுள்ள இந்த புதிய சிக்கலால் அந்நிறுவனத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அமெரிக்க வர்த்தக கமிஷன் அறிவித்துள்ள அபராதத்திலேயே இதுதான் அதிகப்படியான தொகையாகும். இதனை ஃபேஸ்புக் நிறுவனம் கட்ட ஒப்புக்கொண்டுள்ளது.
இதனிடையே இதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இது போன்ற தகவல் திருட்டு மீண்டும் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ளும்படி தனது ஊழியர்களுக்கு மெயில் மூலம் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனாலும் அவ்வபோது தனிநபரின் தகவல்களை மார்க் விற்றுவிடுவதாகவும் செய்திகள் அடிக்கடி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இது அதிக நேரம் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் கழிக்கும் இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.