எம்.பி பிரக்யா தாக்கூர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவதையே வழக்கமாக கொண்டவர். தேர்தலுக்கு முன்பு அவரின் சர்ச்சைக் கருத்துகளுக்காக அவரது பிரசாரத்திற்கே தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்தது.
முன்னதாக தேசப்பிதா மகாத்மா காந்தியைக் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை, ‘தேச பக்தர்' என்று புகழ்ந்து கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்குப் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
சமீபத்தில் போபால் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க தொண்டர் ஒருவர், தனது பகுதியில் சுகாதாரமற்ற சூழல் இருப்பதாகவும் அதனைக் களையவேண்டும் எனவும் பிரக்யா தாக்கூரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், போபால் தொகுதிக்குட்பட்ட செஹோர் பகுதியில் பா.ஜ.க கூட்டத்தில் பிரக்யா தாக்கூர் கலந்துகொண்டு பேசினார்.
அந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, “உங்களது கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு நான் எம்.பி-யாக தேர்வு செய்யப்படவில்லை. அதனை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை உள்ளூர் பிரதிநிதிகளை வைத்து சரி செய்துகொள்ளுங்கள். என்னை அடிக்கடி போன் மூலம் அழைத்து தொந்தரவு செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த தடாலடியான பேச்சு பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரக்யா தாக்கூரின் இந்தப் பேச்சைக் கேட்ட அப்பகுதி மக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.