ஒடிஷா மாநிலத்தின் கலாஹந்தி மாவட்டத்தில் உள்ள குருபூர் கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் நிகிடி மஜ்ஹி என்பவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிகிடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இறந்தவரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல நிகிடி குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் அல்லது அமரர் வேன் வசதி செய்துக் கொடுக்க கோரியுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் வாகன வசதி செய்துக் கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதனையடுத்து இறந்தவரின் குடும்பத்தினர் செய்வது அறியாது திகைத்து உள்ளனர். பின்னர் ஒருகட்டத்தில் அவரின் உடலை சுமந்து செல்ல முடிவு எடுத்து, ஒரு கடினமான குச்சியில் துணியை கட்டி இறந்தவரின் உடலை அவரது கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் இருந்து கிராமத்திற்கு குடும்ப உறுப்பினர்களே கொண்டு சென்ற சம்பவம் காண்போரை அதிர்ச்சி அடைய செய்ததாக தகவல் வெளிவந்தது.
மேலும், இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோது, திங்கட்கிழமை வாகனம் ஓட்டமாட்டோம் என்று காரணம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இறந்தோர் உடலை கொண்டு செல்ல மகாபிரயாண என்ற வாகன திட்டம் ஒடிஷா அரசால் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு யாருக்கும் பயன் அளிக்கவில்லை என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.