ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட் நிறுவனம் சார்ப்பில் ஆண்டு தோறும் தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தப்படும். தெருவோரக் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்தும் மற்றும் அவர்களின் தன்னம்பிக்கையை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் அந்த அமைப்பின் சார்பில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தொருவோர குழந்தைகள் அந்த போட்டிகளில் பங்கேற்றனர். தெருவோர சிறுவர்களுக்காக நடந்த உலகக்கோப்பை தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த சூர்யா, பால்ராஜ், மோனிஷா மற்றும் நாகலட்சுமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இவர்கள் பங்கேற்ற போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்த சிறுவர்கள் சந்தித்தனர். அப்போது வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு வைகோ தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறுவர்கள் பங்கேற்ற போட்டி விவவரம், வீட்டின் நிலைமைகளை கேட்டறிந்தார். இந்த சிறுவர்களில் மோனிஷா என சிறுமி பள்ளியில் படித்து வருவதாகவும், நாகலட்சுமி என்ற மாணவி கல்லூரியில் படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இரண்டு பெரும் தற்போதுதான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இவர்கள் போட்டியில் பங்கேற்க சென்ற போது, கல்லூரியில் மாணவர்களுக்கான நேர்காணல் நடந்துள்ளது. இதனால் மாணவர்களால் பங்கேற்க முடியாமல் போனது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட வைகோ, அடுத்த நிமிடமே "நான் கல்லூரிக்கு வருகிறேன், உங்களை கல்லூரியில் சேர்த்து விடலாம்" என தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடியே மறுநாள் காலையில், சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாணவர்களுடன் சென்றுள்ளார்.
காத்திருந்து கல்லூரி முதல்வரை சந்தித்து அவர்கள் பொருளாதார சூழல், திறமை ஆகியவற்றை எடுத்துக்கூறி அவர்களை சேர்த்துக்கொள்ளுமாறு கோரியுள்ளார். பின்னர் அவர்களை சேர்த்துக்கொள்ள பரிந்துரை கடிதம் ஒன்றையும் அளித்துள்ளார்.
அதனையடுத்து கல்லூரி முதல்வர் மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக்கொள்வதாக உறுதியளித்தார். இரு மாணவர்களும் சீட் கிடைத்த மகிழ்ச்சியில் சந்தோசத்துடன் வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வைகோ மாணவர்களை வாழ்த்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.