‘ரா’ உளவு அமைப்புக்காக பாகிஸ்தான் நாட்டில் உளவு பார்த்ததாகக் கூறி கடந்த 2016-ம் ஆண்டு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டார். உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாகக் கூறி பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
குல்பூஷண் மீதான விசாரணை குறித்து இந்திய அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் மீதான மரண தண்டனைக்கு தற்காலிக தடை விதித்திருந்தது.
இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (ஐசிஜே) இன்று தீர்ப்பு வழங்குவதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சற்றுமுன்பு, குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை விதித்துள்ளது சர்வதேச நீதிமன்றம்.
இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷண் ஜாதவுக்கு உரிமை உண்டு. வியன்னா பிரகடனத்துக்கு எதிரான வகையில் பாகிஸ்தானில் குல்பூஷண் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் மறுஆய்வு செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது சர்வதேச நீதிமன்றம்.
இந்த சம்பவம் இந்தியாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியை தேடித்தந்த வழக்கறிஞர் பற்றி செய்தியை கேட்டதும் இந்திய மக்கள் அவரை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரிஷ் சால்வே. அவரின் பெரும்பாலான வழக்கு அதிக கட்டணம் வசூலிப்பர் என்ற தகவல் வெளிவந்தது. ஆனால் குல்பூஷண் வழக்குக்காக அவர் வாங்கிய தொகை என்பது வெறும் 1 ரூபாய் தான். இந்த வழக்குக்காக அவர் ஐ.சி.ஜே.யில் வாதாட 1 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்றுள்ளார் என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களின் உணர்வுகளை மதிப்பளித்து அவர் இந்த கட்டணத்தை இந்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக அணு ஆயுத விதிகளை இந்திய மீறியதாக மார்ஷல் தீவுகள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை எதிர்த்து வாதாடி வெற்றிபெற்றவர் ஹரிஷ் சால்வே என்பது குறிப்பிடத்தக்கது.