சமூக வலைதளத்தின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள தற்போதைய காலகட்டத்தில், ட்விட்டரில் ஏதேனும் ஒரு டாபிக் தொடர்பாக பதிவிட்டால் அதனை ட்ரெண்ட் செய்வதையே முதல் வேலையாகக் கொண்டுள்ளனர் பலர். பொழுது போக்குக்காக மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த பயனுள்ளதாகவும் பல செயல்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக் தான் #SareeTwitter. இதில், நம் பாரம்பரிய ஆடைகளில் ஒன்றான புடவை அணிந்து அதனை படம் பிடித்தும், புடவை அணிந்து முன்பு எடுத்த புகைப்படங்களையும் இந்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் தங்களது மனைவி, குழந்தை, அம்மா, சகோதரி, தோழிகள் என அனைவரது புடவையணிந்த புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
இதில், திரைப்பிரபலங்கள், மற்ற துறை பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல பெண்கள் தங்களின் புடவைக்கட்டிய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், கிழக்கு உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இந்த #SareeTwitter ட்ரெண்டில் இணைந்துள்ளார். 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது புடவை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.
அதில், திருமண நாள் அன்று காலை நடத்தப்பட்ட பூஜையின்போது எடுக்கப்பட்ட படம் என தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா காந்தி பதிவிட்ட சில மணித்துளிகளிலேயே ட்விட்டரில் வைரலாக தொடங்கியது.
பிரியங்காவின் பதிவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தும், பிரியங்கா காந்தி சேலை அணிந்திருக்கும் வேறு சில புகைப்படங்களையும் கமென்ட்டில் பதிவிட்டுள்ளனர்.
மேலும், இளைஞர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் ப்ரியங்காவின் பதிவுக்கு, மிகவும் அழகாக இருக்கிறீர்கள் பிரியங்கா ஜி என்றும், உங்களின் செயல்பாடுகளிலும் இந்த கருணையும் அழகும் பிரதிபலிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.