சமூக வலைதளங்கள் என்பவை ஒருவர் தனது கருத்தை, உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் கொண்டு செல்லலாம் என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் இன்று அவற்றின் தேவை என்பது பெரும்பாலும் பொழுதுபோக்குதான்.
குறிப்பாக இளைஞர்கள் புதிய புதிய சவால்கள் என்று சொல்லக்கூடிய விதவிதமான challenge-களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் களமிறக்குவார்கள். ஆன்லைனில் முன்னெடுக்கப்படும் சேலஞ்ச்கள் அவ்வப்போது வைரலாகி வருவது வழக்கமாகிவிட்டது. கடந்த ஆண்டுகளில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் வைரலானது. ஐஸ் கட்டிகள் நிறைந்த பக்கெட்டை தங்கள் மீது ஊற்றிக்கொள்ள வேண்டும். இது தான் அந்த சேலஞ்ச்.
அதன் பின்பு கீகீ சேலஞ்ச் எனப்படும் ஓடும் காரில் இருந்து இறங்கி பாடலுக்கு நடனம் ஆடுவது. சமீபத்தில் பாட்டில் கேப் சேலஞ்ச் எனும் பாட்டில் மூடியை காலால் உதைத்து திறக்கும் புதிய சேலஞ்ச் இணையத்தில் வேகமாகப் பரவியது.
அவ்வகையில், தற்போது '' வாக் எ மைல் '' என்ற பெயரில் புதிய சேலஞ்ச் அறிமுகமாகியுள்ளது. இதன்படி இரு கால்களிலும் குப்பைத் தொட்டி, சாலைப் பிரிப்புத் தடுப்பு, காலி குடிநீர் கேன்கள் ஆகியவற்றை கட்டிக் கொண்டு நடப்பதே வாக் எ மைல் சேலஞ்ச் ஆகும்.
ஆனால், சிலர் இதனை தவறாக புரிந்துகொண்டு வேறு விதமாகச் செய்ய நினைத்து காயமடைந்து வருகின்றனர். அவர்கள் காயமடைந்து சொதப்பும் வீடியோவும் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.