திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுக்கு தொடர்ச்சியாக பெண் குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்காக முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என பெயர் வைப்பது வழக்கம். அப்படி வைத்தால் அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்று அவர்களின் நம்பிக்கை.
இதேபோல, தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களும், பெண் குழந்தைகள் பிறக்கக்கூடாது என வேண்டிக்கொள்ளும் விதமாக ‘வேண்டாம் பொண்ணு’, ‘போதும் பொண்ணு’ எனப் பெயர் சூட்டுகிறார்கள். கள்ளிப்பால் கொடுத்துப் பெண் குழந்தைகளைக் கொன்று பஞ்சம் பிழைத்த சோகக் கதைகளும் நம் மரபில் உண்டு.
நாராயணபுரத்தைச் சேர்ந்த அசோகன் என்பவருக்கு முதல் இரண்டும் பெண் குழந்தைகளாக பிறந்ததால் இரண்டாவது குழந்தைக்கு 'வேண்டாம்' எனப் பெயர் வைத்தார். ’வேண்டாம்’ எனப் பெயர் வைக்கப்பட்ட அந்தப் பெண் பொறியியல் படித்து வருகிறார்.
பள்ளியில் படிக்கும்போதே சக மாணவ-மாணவிகள், மாணவிகள் 'வேண்டாம்' என தன் பெயரை சொல்லி கிண்டல் செய்கின்றனர் என்றும், தற்போது கல்லூரியில் படிக்கும்போதும் கிண்டல் செய்கின்றனர் என்றும் பெற்றோரிடம் தெரிவித்து வந்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் பெயரை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லி வந்தனர்.
தற்போது 'வேண்டாம்' பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் நடந்த வளாக நேர்முகத்தேர்வில் ஜப்பான் நிறுவனம் ஒன்று இவரை பணிக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆண்டு சம்பளம் 22 லட்சம் ரூபாய் தருவதாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்டதால் அந்தப் பெண்ணும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜப்பான் நிறுவனத்தில் 22 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்ததால் நான் பிரபலமாகவில்லை. 'வேண்டாம்' என்ற பெயர் கொண்ட என்னை ஜப்பான் நிறுவனம் வேண்டும் என்று கேட்பதால்தான் பிரபலமாகி உள்ளேன் எனக் கூறியிருக்கிறார் 'வேண்டாம்'.
“சொந்தமாக கொஞ்சம் கூட நிலம் இல்லாத ஏழை தாய் தந்தைக்குப் பிறந்த நான் நிதி உதவியின் மூலமாகத்தான் கல்லூரியில் படிக்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைக்கிறார்கள். இந்தச் சூழலில் பெண் குழந்தை வேண்டாம் என அவர்கள் முடிவு செய்ததில் ஆச்சரியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார் ‘வேண்டாம்’.
‘வேண்டாம்’ தன் வெற்றியின் மூலமாகப் பாலின சமத்துவம் குறித்துப் பாடம் கற்பித்துள்ளார். அவரது பெயரைக் கேட்கிற அத்தனை பேரும், அது சூட்டப்பட்டதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும்போது சமூகத்தில் பாலின சமத்துவத்தின் இன்றியமையாமையை உணர்ந்து கொள்வார்கள்.