மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க அரசு ஊக்குவிக்கிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகிறது.
கடந்த மாதத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் பைக் திருட வந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த இளைஞரிடம் 'ஜெய் ஸ்ரீராம்' என சொல்லச் சொல்லி, ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்தில் மயக்கமடைந்து அவர் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போல், மேற்கு வங்கத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடாததற்காக மதபோதகரை ரயிலில் இருந்து இந்துத்துவா கும்பல் ஒன்று தள்ளிவிட்டது. அந்த சம்பவம் முடிந்த 2 நாட்களில் மும்பை தானா பகுதியில் திவா என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டால் விடுவிப்பதாகக் கூறி மிரட்டி அவரின் காரை சேதப்படுத்தி அவரையும் அடித்து வன்முறையில் இந்துத்துவா கும்பல் ஈடுபட்டது.
பின்னர் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே கித்வாய் நகரைச் சேர்ந்த முகமது தாஜுதீன் என்ற 16 வயது முஸ்லிம் சிறுவனையும், 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமில்லாமல்,குல்லா அணியக் கூடாது என்றும் மிரட்டியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்ந்து அசாம் மாநிலம் பர்பிட மாவட்டத்தில் ஃபக்ரூதின் அலி அகமது என்ற மருத்துக் கடைகார ஊழியரை பைக்கில் வந்த நான்கு இந்துத்துவா கும்பல் அடித்து காயப்படுத்தியது.
இந்த தாக்குதல் நடைபெற்று நடைபெற்று ஒருவாரம் கூட ஆகாத நிலையில், அப்போது உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில் செயல்பட்டு வரும் மதராஸா பள்ளியில் இஸ்லாமிய கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. பள்ளியின் அருகில் உள்ள ஜி.ஐ.சி மைதானத்தில், அப்பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்துத்துவா கும்பல், மாணவர்கள் குல்லா அணிந்திருப்பதைப் பார்த்த பிறகு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை கூற சொல்லி மிரட்டியுள்ளனர்.
மாணவர்கள் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து ஆத்திரமடைந்த அவர்கள் மாணவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு பயந்து மாணவர்கள் ஓட முயன்றுள்ளனர். அப்போதும் விடாமல், அந்த வெறிபிடித்த இந்துத்துவா கும்பல் அவர்களை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயம் பட்ட மாணவர்கள் பள்ளிக்கு ரத்த காயங்களுடன் சென்றுள்ளனர்.
மாணவர்களின் ரத்தக் காயத்தைப் பார்த்த ஆசிரியர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்துத்துவா கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதராஸா பள்ளி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்தது.
இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தினம் தினம் நாட்டின் எதோ ஒரு பகுதியில், ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வருகின்றனர். ஒருகாலத்தில் ஆன்மிகத்திற்கான சொல்லாக இருந்தது, தற்போது வன்முறை வெறியர்களின் கோஷமாக மாறி இருப்பது வேதனை அளிக்கும்படி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.