ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா மற்றும் பத்கம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. பாராமுல்லா அணிக்காக ஜஹாங்கிர் அகமது வார் என்ற 18 வயது வீரர் விளையாடி வந்துள்ளார். விளையாட்டின் போது எதிரணி பவுலர் வீசிய பந்து தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து சகவீரர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜஹாங்கிர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீரர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்து போட்டி அமைப்பாளர் ஒருவர் கூறுகையில், "போட்டியின் போது ஜஹாங்கிர் ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துதான் பங்கேற்றார். பந்து வரும்போது ஹெல்மெட் விலகி அவரின் கழுத்துப் பகுதியில் பந்து தாக்கியுள்ளது.
எனினும் மைதானத்தில் இருந்து மிகக் குறைவான தூரம் தான் மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர். இருந்தபோதும் அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது". என்று அவர் தெரிவித்துள்ளார்.