தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், டிக் டாக் வீடியோ பதிவு செய்தபோது, ஒருவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக, சமூக செயலியான டிக்டாக் உயிர்களைக் காவுவாங்கி வருகிறது. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் பொழுதுபோக்காகப் பயன்படும் வரை சிக்கல் இல்லை. அதைத் தாண்டி தொடர் பழக்கமாக மாறும்போது அபாயகரமான விளைவுகள் ஏற்படுகின்றன. அப்படி ஒன்றுதான் தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவமும்.
தெலங்கானா மாநிலம் தூலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மலு, பிரசாந்த் ஆகிய இருவரும், அங்குள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் தண்ணீரில் இறங்குவதை டிக்டாக் செயலி மூலம் பதிவு செய்துள்ளனர்.
பின்னர், நரசிம்மலுவின் டிக்டாக் வீடியோக்களை பதிவு செய்ய கரைக்கு வந்துள்ளார் பிரசாந்த். மூழ்குவது போல டிக்டாக் செய்துகொண்டிருந்தபோது, நரசிம்மலு ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார்.
நீச்சல் தெரியாத நரசிம்மலு, தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில், பிரசாந்த் கிராம மக்களை அழைத்து வரச் சென்றுள்ளார். அவர்கள் வருவதற்குள் நரசிம்மலு உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.