திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தி.மு.க மாவட்டச் செயலாளர்களும், இளைஞரணி நிர்வாகிகளும், தொண்டர்களும் ‘உதயநிதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கவேண்டும்’ என கடந்த மாதமே தீர்மானம் நிறைவேற்றி வேண்டுகோள் வைத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் ’இளைஞரணி செயலாளர்’ பொறுப்பை உதயநிதி ஸ்டாலினுக்கு அளித்திருக்கிறார் கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன். கழக பிரசாரப் பணிகள், அளிக்கப்பட்ட பொறுப்புகள் வாயிலாக மிகச்சிறந்த நிர்வாகி என நிரூபித்துப் பொறுப்பேற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலினுக்கு பதிவி வழங்கியதை அடுத்து மாநிலம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் உற்சாகத்தில் இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருகின்றார். மேலும் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கியது குறித்து ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கருத்து பதிவிட்டுள்ளார், அதில் அவர் கூறியதாவது, "இயக்கத்தின் அடித்தளம் இளைஞர்கள். அந்த இளைய சக்தியை ஒருங்கிணைக்கும் கடமையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செய்வேன்.
பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து உன்னதமான செயல்பாடுகளின் மூலமாக கழக வெற்றிகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்காகவும் பாடுபட உறுதி ஏற்கிறேன்". என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், எதிர்வரும் காலங்களில் உதயநிதி ஸ்டாலினின் பிரசார உத்திகளும், உழைப்பும் திராவிட முன்னேறக் கழகத்துக்கு பெரும் பலமாக அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கிறது.