கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி அன்று, பெங்களூருவில் இருந்து பாட்னா செல்லும் சங்கமித்ரா விரைவு ரயிலின் ஏசி கோச்சில் உள்ள மேல் படுக்கையின் ஏசியில் இருந்து தண்ணீர் அருவி போன்று வழிந்தோடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இது தொடர்பாக பயணி ஒருவர் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ-1 ஏசி கோச்சில் நுழைவு வாயிலுக்கு அருகே உள்ள கழிவறையில் இருந்து நேராக ஏசி வழியாக தண்ணீர் கொட்டுவதாகவும் இதனால் தங்களது லக்கேஜ் அனைத்து நனைந்துவிட்டதாகவும் பேசியியிருக்கிறார்.
மேலும், புகாரளித்த பின் டிக்கெட் பரிசோதகர் மட்டுமே வந்து சோதனையிட்டார். அப்போது பயணி ஒருவர் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏசியில் இருந்து கொட்டும் நீரை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பயணி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத ரயில்வே நிர்வாகத்தின் மீது அதிருப்தியடைந்த பொதுமக்கள், கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.