வைரல்

“என்னவாக இருந்தால் என்ன.. முழுமனதோடு செயல்படுங்கள்” : கல்பனா சாவ்லா கற்றுத்தரும் பாடம்!

விண்வெளிக்குச் செல்லும் கனவை விடாமுயற்சியோடு பற்றிப்பிடித்த கல்பனா சாவ்லா, 1962 மார்ச் 17-ம் தேதி (சான்றிதழின் படி 1961, ஜூலை 1) பிறந்தவர். அவரது கனவு குறித்த சிறப்புக் கட்டுரை!

“என்னவாக இருந்தால் என்ன.. முழுமனதோடு செயல்படுங்கள்” : கல்பனா சாவ்லா கற்றுத்தரும் பாடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உயரமான கட்டிடத்தில் நின்று மொத்த நகரத்தையும் பார்ப்பதே அவ்வளவு அழகான காட்சியாக இருக்கும். பூமிக்கு வெளியே நின்று பூமியையும், இந்தியாவையும் பார்ப்பது எவ்வளவு அழகாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். எல்லாமே நாம் நிர்ணயிக்கும் இலக்குதான். அப்படி இலக்கோடு வாழ்ந்து பூமியை 252 முறை சுற்றி வந்த ஒரு வீராங்கனையின் வாழ்க்கையில் அவரது இலக்கு அவ்வளவு சாதாரணமானதாக வந்துவிடவில்லை.

ஆம், கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை சற்று கடினமான அத்தியாயங்களை கடந்து வந்ததுதான். ஆனால் கல்பனா சாவ்லா அதனை தன் முயற்சிகளால் எளிதாகக் கடந்தார். ''நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை நீங்கள் எங்கு தரவரிசைப் படுத்தியுள்ளீர்கள் என்பதை பொறுத்து முடிவு செய்யலாம்'' என்று ஒருமுறை கல்பனா சாவ்லா கூறியிருப்பார். அப்படித்தான் அவர் தனது விண்வெளிப் பயண இலக்கை முதல் இடத்திலேயே தரவரிசைப்படுத்தியிருந்தார்.

பள்ளிக்கூடம் படிக்கும்போது கல்பனா சாவ்லா ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பாராம். அப்போது அவரது நோட்டுகளில் விமானங்களை வரைவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். வானத்தில் விமானம் பறக்கும் போதெல்லாம் அதனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்து விமானம் பார்வையிலிருந்து மறையும் வரை அந்த இடத்தை விட்டு நகர மாட்டாராம் கல்பனா சாவ்லா. சிறுவயதில் தான் வரைந்த ஓவியங்கள், தான் ரசித்த காட்சிகள் மூலம் ஆழமாய் அடிமனதில் பதிந்த விமானம் அவருக்கான இலக்காக கல்லூரி நாட்களில் மாறியது.

“என்னவாக இருந்தால் என்ன.. முழுமனதோடு செயல்படுங்கள்” : கல்பனா சாவ்லா கற்றுத்தரும் பாடம்!

விமான ஊர்தி துறையில் இளங்கலை பட்டம் பயின்ற கல்பனா அதோடு நிறுத்திவிடவில்லை. விண்வெளி பொறியியலில் முதுகலை பட்டம், விண்வெளித் துறையில் முனைவர் பட்டம் என கல்பனாவின் ஆகாயச்சிறகுகள் கனவாய் விரிந்தன. கண்கொட்டாமல் பார்த்த விமானம் கல்பனாவின் வாழ்வின் அங்கமாகிப் போகுமளவுக்கு கல்பனா தன்னை தரமுயர்த்திக் கொண்டார்.

தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக 1993-ல் சேர்ந்தார். ஓராண்டுக்குள் அவரின் விண்வெளி வீரர் கனவு நிஜமாக தொடங்கியது. 3,000 பேர் விண்ணப்பித்த நாசா விண்வெளி வீரர் பயிற்சியில், ஆறு பேர் மட்டுமே தேர்வானார்கள். அவர்களுள் கல்பனாவும் ஒருவர். ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக பட்டியலில் இடம்பிடித்தார்.

பயிற்சிக்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997-ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி துவங்கியது. ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87-ல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்ட கல்பனாவுக்கு முக்கியப் பொறுப்புகளும் தரப்பட்டன. சுமார் 252 முறை பூமியைச் சுற்றி அந்த விண்கலத்தில் சுமார் 10 மில்லியன் மைல் தொலைவு பயணித்து ஆய்வு செய்தார் கல்பனா. தனது முதல் விண்வெளிப்பயணத்தில் சக விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார்.

“என்னவாக இருந்தால் என்ன.. முழுமனதோடு செயல்படுங்கள்” : கல்பனா சாவ்லா கற்றுத்தரும் பாடம்!

முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா, பிறகு அதே கொலம்பியா விண்கலத்தில் 2003 ஜனவரி 16-ம் தேதி ஆறு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் விண்ணுக்குப் பயணித்தார். பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர்கள், பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி தரையிறங்க தயாரானார்கள். பூமியைத் தொட 16 நிமிடங்களே இருந்த நிலையில், அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா எனும் விண்வெளி வீராங்கனை நிரத்தரமாக விண்வெளியில் கலந்தார்.

கொலம்பியா விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முன் 'முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால் எனக்கும் ஊக்கம் ஏற்படும்' என்றார் கல்பனா சாவ்லா. இன்னும் முழுமனதோடு விண்வெளி வீரராக வேண்டும் என்பவர்களுக்கு கல்பனா சாவ்லா ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்கி ஊக்கமளிக்கிறார். இன்று இந்தியாவில் பல பெண்கள் விண்வெளித்துறை சார்ந்த படிப்புகளை அதிகம் விரும்பி படிக்கக் காரணம் சாவ்லாதான். விண்வெளி வீரராக நினைப்பவர்கள் எல்லோரும் காற்றில் கலந்த கல்பனா சாவ்லாவை சுவாசிக்கும் போதெல்லாம் ஊக்கமடைவார்கள்.

- உமேரா பானு

banner

Related Stories

Related Stories