இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சியில், கடந்த ஆண்டு விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி வரை கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பித்துவிட்டார். அவரை அழைத்து வர முயற்சிகள் நடந்து வருவதாக வழக்கம்போல கதைகளையே மத்திய அரசாங்கம் கூறுகிறது.
இந்நிலையில் நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. அதைக் காண விஜய் மல்லையா வந்திருந்தார்.
போட்டி முடிந்து அங்கிருந்து கிளம்பியபோது தொழிலதிபர் விஜய் மல்லையா மக்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டார். அங்கிருந்த இந்தியர்கள் அவரை அடையாளம் கண்டு "சோர் ஹே" என முழக்கம் எழுப்பினர். அதாவது “இவன் ஒரு திருடன்” என அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
மேலும் “மனித குணத்துடன் நடந்துகொள்ளுங்கள், இந்திய நாட்டிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்று மக்கள் ஆரவாரமாக அங்கு முழக்கம் எழுப்பினர். மக்கள் முழக்கம் எழுப்பியபோது விஜய் மல்லையா கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நழுவினார்.
இதுகுறித்து, ஆங்கில செய்தி நிறுவனத்திடம் விஜய் மல்லையா பேட்டியளித்தார். இந்தப் பேட்டியின் போது, “விளையாட்டை பார்க்கவே வந்தேன். ஜூலையில் விசாரணைக்காக ஆஜராக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்தார்.
விஜய் மல்லையாவை நோக்கி இப்படி கோஷமிடுவது இது இரண்டாவது முறை. 2017 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போதும் “திருடன், திருடன்” என்று மக்கள் கோஷமிட்டனர்.