திருப்பூர் மாவட்டம் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் மீன் வியாபாரி கோபால். மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு, தினமும் இரவு வீட்டிற்கு வரும் அவரை பார்த்து அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்துள்ளன. தன்னை தினமும் பார்த்தாலும், இரவு நேரத்தில் குரைப்பதை நாய்கள் நிறுத்தவில்லை என்பதால் கோபால் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் வண்டியை நிறுத்திவிட்டு, சில நேரங்களில் நாய்களைக் கோபால் தாக்கியுள்ளார். சில சமயங்களில் நாய்களிடம் கடியும் வாங்கியுள்ளார்.
நாய்கள் குரைப்பது தொடர்ந்ததால் நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட கோபால் முடிவு செய்தார். இதனையடுத்து கடையில் வாங்கிய சில்லி சிக்கனில் விஷத்தை கலந்து நள்ளிரவில் நாய்களுக்கு உணவாக கொடுத்துள்ளார். இதை உண்ட நாய்கள் அடுத்தடுத்து மரணமடைந்தன.
திடீரென நாய்கள் தொடர்ந்து இறப்பதில் சந்தேகமடைந்த உரிமையாளர்கள், அவற்றின் சடலங்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் விஷம் கொடுத்து நாய்கள் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை பார்த்த போது,கோபால் விஷம் கலந்த சில்லி சிக்கனை நாய்களுக்கு கொடுத்த காட்சிகளும், அவற்றை உண்ட பிறகு, நாய்கள் உயிரிழக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரித்த திருப்பூர் வடக்கு போலீசார் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மீன் வியாபாரி கோபாலை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில், தெருநாய் தொல்லை அதிகம் இருந்தால் உடனடியாக தங்களிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும், மாறாக, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, நாய்களை கொலை செய்யக்கூடாது என்றும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.