தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடியதால் 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் நீமுச் நகரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் ஃபர்ஹான் குரேஷி தான் பலியான சிறுவன்.
மதிய உணவு முடித்தவுடன் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல், 6 மணி நேரம் பப்ஜி விளையாடியிருக்கிறார் குரேஷி. ஒரு கட்டத்தில் கேமில் வெல்ல முடியாத எரிச்சலில் கத்தி கூச்சலிட்டுள்ளார். என்ன ஆனது என்று குடும்பத்தினர் விரைந்து சென்று பார்க்கும்போது சுருண்டு விழுந்து மயங்கியிருக்கிறார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் குரேஷியின் இதயம் நல்ல நிலையில் தான் இருப்பதாகவும் கூறுகின்றனர். விளையாட்டின் உற்சாகம் அவரின் அட்ரினலினில் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கலாம், இதனால் இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.