நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராகிறார். அதற்கான பதவியேற்பு விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு என அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
நேசமணி யார்? அவருக்கு என்ன ஆச்சு? என பல கேள்விகளை எழுப்பியும், அவர் நலமாக உள்ளார், 2 இட்லி சாப்பிட்டார், சிகிச்சை முடிந்துவிட்டது, வேறு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார், நேசமணி உடல்நலம் பெற, மண் சோறு சாப்பிடுவது என நூதன முறைகளில் வழிபாடுகளும் நடைபெறுவதாக மீம்ஸ்களை நெட்டிசன்கள் அள்ளி தூவி வருகின்றனர்.
2001ம் ஆண்டு ஜனவரி 14ல் வெளியான விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த திரைப்படம்தான் ஃப்ரண்ட்ஸ். இந்த படத்தில் நடிகர் வடிவேலு நேசமணி என்ற காண்ட்ராக்டர் கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது இந்த கதாபாத்திரத்தம் பெரிதளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய நடிகர் வடிவேலு, “இவ்வளவு ஆண்டுகளாகியும் நேசமணி கதாப்பாத்திரம் நிலைத்திருப்பதற்கு மக்கள் அளித்த வெற்றியும் கடவுள் கொடுத்த வரம்தான் காரணம்” என எளிமையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், Pray for Nesamani குறித்து பேசிய, நேசமணியின் தலையில் சுத்தியலை போட்ட அவரது அண்ணன் மகன் கிருஷ்ண மூர்த்தி, (ரமேஷ் கண்ணா) “அழகான பொண்ணோட கனவு கண்ட போது என் சித்தப்பா நேசமணி எட்டி உதச்சதுல கீழ விழுந்து இடுப்பு உடைஞ்சுதே இதுலா யார்னா கேட்டீங்களா?” என நகைச்சுவையாக பேசியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழித்து தற்போது ட்ரெண்ட் ஆகியிருப்பதற்கு பெருமளவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ரமேஷ் கண்ணா. மேலும், மீம் கிரியேட்டர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முகநூலில் ஆரம்பித்த #Pray_For_Nesamani ட்ரெண்டாக காரணமாக இருந்த விக்னேஷ் பிரபாகர் என்ற இளைஞர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சும்மா விளையாட்டாக சிவில் இன்ஜினியர்ஸ் பேஜில் கமெண்ட் பன்னது இப்டி உலக அளவுல ட்ரெண்ட் ஆகும்னு நினைச்சுக்கூட பாக்கல என்று தெரிவித்துள்ளார்.