பொதுவெளியில் யாராவது இரக்கமற்ற வகையில் சக அப்பாவி மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதை வீடியோவாக எடுத்து நடவடிக்கை எடுக்கக்கோரி சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார்கள். இப்படி பல வீடியோக்கள் பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் காணக்கிடைக்கும். இதன் மூலம் பாதிக்கப்படும் நபர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் எனப் பலரும் அதைப் பகிர்வார்கள்.
தற்போது அப்படி பகிரப்பட்ட வீடியோ ஒன்று அதிக அளவில் பரவி ஒருவருடம் கழித்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பெரிய ஆதாரமாக மாறியுள்ளது.
அப்படி என்ன நடந்தது ? ஒரு வருடத்திற்கு முன்பாக, ஹரியானா மாநிலத்தின் ஃபாரிதாபாத் என்ற இடத்தில் ஒரு பெண்ணை 5 போலீஸார் அடிக்கும் கொடூரம் நடந்துள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவியது. அப்போதே, இந்த சம்பவத்திற்கு மாநில பெண்கள் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில், பெண் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை அடையாளம் கண்டு 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறப்புக் காவல் துறையினர் 3 பேரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநில காவல் துறை அதிகாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்துள்ளார்.
அதில், “சமீபத்தில் காவல்துறையினர் 5 பேர் ஒரு பெண்ணைத் தாக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தால் காவல்துறையினர் மீது மேலும் அதிருப்தி உருவாகியுள்ளது. ஆனால் இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றுள்ளது.
அதில் பாதிக்கப்பட்ட பெண் இதுநாள்வரை எந்த புகாரையும் காவல்துறையினரிடம் கொடுக்கவில்லை, அதனால்தான் நடவடிக்கை எடுக்கமுடியாமல் போனது. வீடியோ வைரலாக பிறகு நாங்களே முன்னின்று விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ஹரியானா காவல்துறை பெண்களை மதிக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. அதற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் எங்கள் துறையைச் சேர்ந்த நபர்களே நடந்து கொண்டாலும், அவர்கள் மீது கறாரான நடவடிக்கை எடுக்கத் தயங்காது” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ள ஹரியானா போலீஸ் முயன்று வருகிறது. அவரிடமிருந்து வாக்குமூலம் வாங்கும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளது காவல்துறை. சமூக வலைத்தளங்களால் சில நேரங்களில் இதுபோன்ற நன்மையும் நடக்கும் என்பது புலனாகியுள்ளது.